பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது


பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது
x
தினத்தந்தி 15 Jun 2021 1:09 AM IST (Updated: 15 Jun 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது.

மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள்

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் சீராக செயல்பட முடியவில்லை. இதனால் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாணவ-மாணவிகளுக்கு இணையவழியில் பாடங்களை பயிற்றுவித்து வருகின்றன.

கொரோனா பரவல் 2-வது அலையால், கடந்த மார்ச் மாதம் பள்ளிக்கூடங்களில் ஆண்டு இறுதி பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. பிளஸ்-2 தேர்வும் ரத்து செய்யப்பட்டதால், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்காக அரசு குழு அமைத்துள்ளது.

பிளஸ்-1 மாணவர் சேர்க்கை

இதேபோன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் நடத்தப்படாததால், 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நேற்று பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.

பள்ளிக்கூடங்களுக்கு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர். 10-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் பெரும்பாலானவர்கள் தங்களது பெற்றோருடன் பள்ளிக்கூடங்களுக்கு வந்தனர்.

கலந்துரையாடல்

மாணவர்களின் கல்வி பயிலும் திறன், 9-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள், ஆன்லைன் கல்வியில் பங்கேற்றது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கருத்தில் கொண்டு பிளஸ்-1 வகுப்பில் உள்ள பிரிவுகளில் மாணவர்களுக்கு இடம் ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

பெற்றோர்-மாணவர் ஆகியோருடன் தலைமை ஆசிரியர் கலந்துரையாடி, மாணவர்களின் விருப்பத்தை அறிந்து, பிளஸ்-1 வகுப்பில் உரிய பிரிவுகளில் சேர்க்கை நடைபெற்றது. இதேபோன்று கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான ஆயத்த பணிகள் நேற்று தொடங்கின.

Next Story