இரு தரப்பினர் மோதலில் வீடுகள் சூறை; 10 பேர் படுகாயம்
அருப்புக்கோட்டை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள் சூறையாடப்பட்டன. 10 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் போலீஸ் சூப்பிரண்டு மனோகர் நேரடி விசாரணை நடத்தினார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள் சூறையாடப்பட்டன. 10 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் போலீஸ் சூப்பிரண்டு மனோகர் நேரடி விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாக்குவாதம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை இப்பகுதி வழியாக சின்னசெட்டிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் வேகமாக சென்றதாக தெரிகிறது. அப்போது, செட்டிக்குறிச்சி கிராமத்தினர் சிலர் அவர்களை மெதுவாக செல்லும்படி கூறியதாக தெரிகிறது. இதனால் அந்த இளைஞர்களுக்கும், ஊர் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
10 பேர் படுகாயம்
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் சின்னசெட்டிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் ஊரில் இருந்து மேலும் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்களை வரவழைத்துள்ளனர்.
பின்னர் அந்த இளைஞர்களுக்கும், செட்டிக்குறிச்சியை சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர். அப்போது வீடுகளின் மீதும் கற்கள் வீசப்பட்டதில் பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஒரு சில வீடுகளில் மின்சார மீட்டர் பெட்டிகள், கதவுகள் நொறுக்கப்பட்டன.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை அருப்புக்கோட்டை அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பதற்றம் நிலவுவதால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story