தஞ்சையில் பழுதுபார்க்கும் கடைகளில் குவியும் இருசக்கர வாகனங்கள்
தஞ்சை மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு பிறகு இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடைகள் திறக்கப்பட்டதால் வாகனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு பிறகு இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடைகள் திறக்கப்பட்டதால் வாகனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. தினசரி பாதிப்பு 38 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த மாதம் 10-ந்தேதி முதல் இந்த ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடரங்கில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், மருந்து கடைகள் இறைச்சி கடைகள் போன்றவை மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதர வணிக கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை.
இந்தநிலையில் தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிக அளவில் இருந்ததால் இந்த மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இதர மாவட்டங்களுக்கு கடந்த 7-ந் தேதி முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்திற்கு ஏற்கனவே தொடர்ந்த கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டதால் இதர கடைகள் திறக்கப்படவில்லை.
இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடைகள்
இந்த நிலையில் நேற்று முதல் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தொடர்ந்தது அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கில் ஆட்டோக்கள் மற்றும் கார்கள் குறிப்பிட்ட பயணிகளுடன் இ- பதிவு பெற்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று முதல் ஆட்டோக்கள் மற்றும் கார்கள் குறிப்பிட்ட பயணிகளுடன் இயங்கின.
மேலும் ஊரடங்கு தளர்வில் இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டன.
வாகனங்கள் குவிந்தன
கடந்த ஒரு மாதமாக திறக்கப்படாமல் இருந்த இரு சக்கர வாகன பழுதுபார்க்கும் கடைகள் நேற்று திறக்கப்பட்டதால் ஏராளமான இருசக்கர வாகனங்கள் பழுது பார்ப்பதற்காக குவிந்த வண்ணம் இருந்தன. இதனால் எல்லா இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடைகள் முன்பும் அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story