35 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்


35 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்
x
தினத்தந்தி 15 Jun 2021 1:26 AM IST (Updated: 15 Jun 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில், 35 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர். நீ்ண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கிச்சென்றனர்.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில், 35 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர். நீ்ண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கிச்சென்றனர்.

மதுக்கடைகள் திறப்பு

கொரோனா தொற்றுநோய் பரவலை தடுப்பதற்காக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு பிறப்பித்த நாள் முதல் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன.

இந்த நிலையில் நேற்று முதல் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின்படி டாஸ்மாக் கடைகள், டீ கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

மதுப்பிரியர்கள் கூட்டம்

நெல்லை மாவட்டத்தில் 98 டாஸ்மாக் கடைகளும், தென்காசி மாவட்டத்தில் 69 கடைகளும், நெல்லை மாநகர பகுதியில் 38 கடைகளும் உள்ளன.
இந்த டாஸ்மாக் கடைகள் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது மதுபாட்டில்கள் வாங்க பகல் 12 மணிவரை கூட்டம் குறைவாக இருந்தது.

12 மணிக்கு பிறகு கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. மாலை 3 மணிக்கு மேல் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கிச்சென்றனர்.

முககவசம்

நெல்லை மாநகர பகுதியில் உள்ள நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகே உள்ள கடை, கொக்கிரகுளம் அண்ணா தெருவில் உள்ள கடை, குறுக்குத்துறை டாஸ்மாக் கடை, டவுன் நயினார்குளம் அருகே உள்ள கடை உள்ளிட்ட கடைகளில் நேற்று மாலை 3 மணிக்கு மதுப்பிரியர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. மது வாங்க வந்தவர்கள் அனைவரும் முககவசம் அணிந்து சென்றனர். 

டாஸ்மாக் கடைகளில் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மது பாட்டில்கள் விற்பனை செய்யும் கடை ஊழியர்களுக்கு கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

`பார்’ திறப்பு இல்லை

நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மது விற்பனை நடந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு அதாவது 35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் சிலர் போட்டி போட்டு கூடுதல் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.

டாஸ்மாக் கடைகள் அருகே `பார்'கள் திறக்கப்படவில்லை. இதனால் மதுக்கடை பாரில் யாரும் சென்று மது அருந்தாத வண்ணம் பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எல்லா கடைகளுக்கும் தலா 3 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story