நெல்லை கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் புதிய நிறுவனங்களை தொடங்க நடவடிக்கை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி


நெல்லை கங்கைகொண்டான்   தகவல் தொழில்நுட்ப பூங்காவில் புதிய நிறுவனங்களை தொடங்க நடவடிக்கை  அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
x
தினத்தந்தி 14 Jun 2021 8:04 PM GMT (Updated: 14 Jun 2021 8:04 PM GMT)

நெல்லை கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் புதிய நிறுவனங்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்

நெல்லை:
நெல்லை கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் புதிய நிறுவனங்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்

அமைச்சர் ஆய்வு

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைந்துள்ளது. இங்கு நேற்று தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அங்கு செயல்பட்டு வரும் சாப்ட்வேர் மென் பொருள் நிறுவனத்தையும் பார்வையிட்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கருணாநிதி திட்டம்
கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்க மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தொலை நோக்கு பார்வையில் உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும். கடந்த 10 ஆண்டுகாலமாக இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 500 ஏக்கர் நிலப்பரப்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தாலும் இங்கு 2️ நிறுவனங்கள் மட்டுமே தற்போது செயல்படுகிறது.

தென் தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவது, இங்கு பல தொழிற்சாலைகளை கொண்டு வந்து அதன் மூலமாக பொருளாதாரத்தை உயர்த்துவது என்பதை குறிக்கோளாக கொண்டு கருணாநிதி விரும்பியவாறு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா மேம்படுத்தப்படும்.

புதிய நிறுவனங்கள்

மேலும் கிராமப்புறத்தில் படித்த இளைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் திறன்வளர் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம்.

இங்கு தொழில் தொடங்க விரும்பும் மென் பொருள் நிறுவனங்களுக்கு விதிமுறைகளை எளிமையாக்க முடியும் என்றால் அதனையும் செய்து, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இந்த பகுதியில் சிறந்த தகவல் தொழில் நுட்ப பூங்கா உருவாக்கப்படும்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் புதிய தொழில் நிறுவனங்கள் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தொழில்நுட்பதுறையில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தொலைபேசி அழைப்பு செய்யும் போது வரும் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் இன்று (அதாவது நேற்று) முதல் தமிழ் மொழியில் பிரசாரம் செய்யப்படுகிறது. மத்திய தொலைத் தொடர்புத் துறையிடம் தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை   ஏற்று  நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது கலெக்டர் விஷ்ணு, ஞானதிரவியம் எம்பி, அப்துல்வகாப் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story