பகவதி அம்மன் கோவில் சீரமைப்பு பணிக்கு ரூ.85 லட்சம் ஒதுக்கீடு


பகவதி அம்மன் கோவில் சீரமைப்பு பணிக்கு  ரூ.85 லட்சம் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 15 Jun 2021 1:43 AM IST (Updated: 15 Jun 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் சீரமைப்பு பணிக்கு ரூ.85 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் சீரமைப்பு பணிக்கு ரூ.85 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
கோவில் தீ விபத்து
குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோவில் கருவறை மேற்கூரை எரிந்து சேதமடைந்தது. தற்போது கோவிலில் தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
விபத்து நடந்த 3-வது நாளில், கோவிலுக்கு நேரில் வந்து, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இந்தநிலையில் நேற்று 2-வது முறையாக அவர் மண்டைக்காடு கோவிலுக்கு வந்தார். பின்னர் அங்கு நடந்து வரும் தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியையும் பார்வையிட்டார். அப்போது தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆகியோர் உடனிருந்தனர். 
பின்னர் அமைச்சர் சேகர் பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி
மண்டைக்காடு கோவில் மேற்கூரையில் தற்காலிகமாக பிளாஸ்டிக் தார்ப்பாய் போடப்பட்டது. மேலும், தீ பிடிக்காமல் இருக்க ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட உத்தரவிடப்பட்டது. 
பக்தர்கள் ஆகம விதிப்படி கோவிலை சீரமைக்க கேட்டுக்கொண்டதை அடுத்து தேவ பிரசன்னம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெறும். தேவ பிரசன்னத்தில் கூறப்படும் கருத்துகளை ஏற்று சாத்தியப்பட்ட பணிகள் செய்து முடிக்கப்படும். 
ரூ.85 லட்சம் ஒதுக்கீடு
கோவிலில் மேற்கூரை பணிக்கு ரூ.50 லட்சமும், தீயணைப்பு மற்றும் மராமத்து பணிகளுக்கு ரூ.35 லட்சமும் என மொத்தம் ரூ.85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் பக்தர்களின் மனம் புண் படாமல் விரைவில் முடிக்கப்படும். கோவில் திருப்பணிகள் முடியும் வரை நான் அடிக்கடி நேரில் வந்து ஆய்வு செய்வேன். தீ விபத்திற்கான காரணம் கண்டறிய கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 4 பேர் கொண்ட குழு முதற்கட்டமாக 8 பேரிடம் விசாரணையை முடித்து உள்ளது.
திருப்பணி மற்றும் தேவ பிரசன்ன பணிகள் முடிந்த பின்பு தான் முழுமையான விசாரணை அறிக்கை வரும். அதில், கோவில் பணியாளர்களின் தவறுகள் தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். 
அர்ச்சகர்களுக்கு பயிற்சி
வரும் காலத்தில் கோவிலில் தீயணைப்பு தெளிப்பான் போன்ற கருவிகள் அமைக்கப்படும். அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் கொள்கைப்படி பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு பணி நியமன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அர்ச்சகர்களுக்கு பயிற்சி அளிக்க இந்து அறநிலையத்துறை தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, அறநிலையத்துறை ஆணையர் குமர குருபரர், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், எம்.ஆர்.காந்தி, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.ஆஸ்டின், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், அறங்காவல் குழு தலைவர் சிவ குற்றாலம், திருக்கோவில் நிர்வாக இணை ஆணையர் செல்வராஜ், தாசில்தார் பாண்டியம்மாள், தேவசம் மராமத்து பொறியாளர் அய்யப்பன், கோவில் மேலாளர் ஆறுமுகதரன் உள்பட பலர்  உடன் இருந்தனர். 

Next Story