குமரியில் மளிகை பொருட்கள் தொகுப்பு, ரூ.2 ஆயிரம் இன்று முதல் வினியோகம்
குமரி மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 14 வகை மளிகை பொருட்கள் மற்றும் கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கும் பணி இன்று தொடங்குகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 14 வகை மளிகை பொருட்கள் மற்றும் கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கும் பணி இன்று தொடங்குகிறது.
அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
குமரி மாவட்டத்தில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2-வது தவணை கொரோனா நிவாரணம் நிதி ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வினியோகம் செய்யப்படுகிறது. இதன் தொடக்கவிழா இன்று காலை 8.45 மணிக்கு காட்டாத்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் நடக்கிறது.
விழாவில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் 2-வது தவணை கொரோனா நிவாரண நிதி ரூ.2000 ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைக்கிறார்.
இதே போல் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் 14 வகை மளிகை பொருட்கள் மற்றும் நிவாரண நிதி ரூ.2,000 ஆகியவற்றை வழங்குகிறார்கள்.
3 லட்சம் தொகுப்புகள்
இந்த நிலையில் நேற்று மாலை நாகர்கோவில் வேதநகர் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட ரேஷன் கடையில் கன்னியாகுமரி மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த கடையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய பைகளில் மளிகை பொருட்கள் சரியாக வைக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, குமரி மாவட்டத்தில் உள்ள 5½ லட்சம் அரிசி ரேஷன் கார்டுதாரர்களில் 3 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்குரிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வந்து சேர்ந்துள்ளது. அவை இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது. மீதம் உள்ள பொருட்களும் வந்து கொண்டிருக்கிறது. அதனால் ரேஷன் கார்டுதாரர்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படும்.
அதேபோல ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கிற இரண்டாவது தவணை ரொக்க பணம் ரூ.2000 இன்று முதல் மளிகை பொருட்களுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. மொத்தம் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.110.97 கோடி ஆகும். அதில் ரூ.56 கோடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே ரொக்கப் பணமும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தங்குதடையின்றி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story