டாஸ்மாக் கடைகள் திறக்காததால் சேலத்தில் மதுப்பிரியர்கள் ஏமாற்றம்
சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்காததால் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்காததால் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கூடுதல் தளர்வுகள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை தொடர்ந்து 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது கொரோனா அதிகம் உள்ள சேலம், நாமக்கல், கோவை உள்பட 11 மாவட்டங்களை தவிர இதர மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. இதனால் அந்தந்த மாவட்டங்களில் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில், சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 220 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. சேலம் மாவட்டத்திற்கு கூடுதல் தளர்வு அறிவிக்கப்படாததால் டாஸ்மாக் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. இதனால் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மதுப்பிரியர்கள் ஏமாற்றம்
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று காலை 10 மணிக்கு சில மதுப்பிரியர்கள் வந்தனர். நீண்ட நேரம் காத்திருந்த அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மதுப்பிரியர்களை பார்த்து டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதிக்கவில்லை என்றும், இதனால் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால் மதுப்பிரியர்கள் மிகுந்த சோகத்துடன் வீடுகளுக்கு திரும்பிச் சென்றதை காண முடிந்தது.
ஒரு சில மதுப்பிரியர்கள் கடைகளை பார்த்தபடியே கலைந்து செல்ல மனமில்லாமல் மிகுந்த மன உளைச்சலுடன் திரும்பி சென்றனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் சேலத்தில் இருந்து மதுப்பிரியர்கள் தங்களது மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் அந்த மாவட்டங்களுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். பின்னர் போலீசாருக்கு தெரியாமல் மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வகைகளை வாங்கி திரும்பி வந்தனர்.
Related Tags :
Next Story