நீலகிரியில் இ-பதிவு பெற்று ஆட்டோக்கள் இயங்கின
நீலகிரியில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து இ-பதிவு பெற்று ஆட்டோக்கள் இயங்கியது.
ஊட்டி
நீலகிரியில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து இ-பதிவு பெற்று ஆட்டோக்கள் இயங்கியது. இ-சேவை மையங்களும் திறக்கப்பட்டன.
ஆட்டோக்கள் இயக்கம்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதிகம் பேர் சிகிச்சையில் உள்ள காரணத்தால் நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு சில தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி புதிய தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. முழு ஊரடங்கு உத்தரவால் நீலகிரி மாவட்டத்தில் ஆட்டோக்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னர் நேற்று முதல் இ-பதிவு பெற்று ஆட்டோக்கள் இயக்கம் தொடங்கியது.
ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வாடகை வாகனங்களும் இயங்கி வருகிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் இல்லாததால் ஆட்டோக்களில் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் சென்றனர். இதனால் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை.
வேளாண் உபகரணங்கள், பம்புசெட் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்து செயல்பட்டது. கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் திறக்கப்பட்டது. விற்பனை கடைகள் தவிர மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைகள் முழு ஊரடங்குக்கு பின்னர் திறக்கப்பட்டன.
டாஸ்மாக் கடைக்கு அனுமதி இல்லை
கடந்த மாதம் 10-ந் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்கள் மூடப்பட்டது. ஊரடங்கு தளர்வு காரணமாக நேற்று முதல் கலெக்டர் அலுவலகம் மற்றும் 6 தாலுகா அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள் திறந்து செயல்பட்டது.
அங்கு பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டை எடுத்தல், திருத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர். அங்கு சுழற்சி முறையில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் டீக்கடைகள் திறக்க அனுமதி இல்லை.
ஊரடங்கு தளர்வால் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. அத்தியாவசிய பணிகளுக்காக அனுமதிக்கப்பட்ட கடைகளின் நுழைவுவாயிலில் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்.
கொரோனா பரவலை தடுக்க கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story