அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கொரோனா உறுதியான வடமாநில தொழிலாளர்கள் 11 பேர் மாயம் - தனியார் கம்பெனிக்கு ‘சீல்’
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் கொரோனா உறுதியான நிலையில் 11 வடமாநில தொழிலாளர்கள் மாயமானதால் அந்த கம்பெனிக்கு சுகாதார துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
திரு.வி.க. நகர்,
சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், அங்கேயே தங்கி வேலை செய்து வந்தனர். அவர்களில் ராஜா என்பவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது.
இதையடுத்து அம்பத்தூர் மண்டல சுகாதாரத்துறை ஆய்வாளர் பாரதிராஜா மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் அந்த கம்பெனியில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றாதது தெரிந்தது. அந்த கம்பெனிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அங்கு வேலை செய்து வந்த 34 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சுகாதார துறை அதிகாரிகள், நேற்று மாலை அங்கு சென்று பார்த்தபோது கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மட்டுமே இருந்தார். மற்ற 11 பேரும் மாயமாகி விட்டனர்.
கொரோனா தொற்று உறுதியானவுடன் அவர்களின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்ததும், வடமாநிலத்தைச் சேர்ந்த 11 தொழிலாளர்களும் கம்பெனியில் இருந்து தப்பிச்சென்று விட்டனர். ஒடிசாவை சேர்ந்த அவர்கள் எங்கு சென்றார்கள்? என்பது தெரியவில்லை.
இதையடுத்து உரிமம் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள், அந்த கம்பெனியை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட 11 பேர் மாயமான சம்பவம் குறித்து சுகாதார துறை ஆய்வாளர் அளித்த புகாரின்பேரில் அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொரோனா நோயாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story