கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற டாஸ்மாக் ஊழியர் பணியிடை நீக்கம்


கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற   டாஸ்மாக் ஊழியர் பணியிடை நீக்கம்
x

கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற பொன்னம்பட்டி டாஸ்மாக் கடை விற்பனையாளரை வேலூர் கோட்ட மேலாளர் கீதாராணி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

வேலூர்

கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை

தமிழகத்தில் 35 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதன்படி வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 116 டாஸ்மாக் கடைகளில் மது, பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டன. டோக்கன் முறையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மதுபிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி சென்றனர்.

குடியாத்தம் தாலுகா செதுக்கரை அருகே உள்ள பொன்னம்பட்டி டாஸ்மாக் கடை விற்பனையாளர் சீனிவாசன். இவர் அரசு நிர்ணயித்த விலையை விட மது, பீர் வகைகளுக்கு கூடுதலாக ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகம் வாங்குகிறேன் என்று பேசும் வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.

விற்பனையாளர் பணியிடை நீக்கம்

இதுகுறித்து வேலூர் டாஸ்மாக் கோட்ட மேலாளர் கீதாராணி விசாரணைக்கு உத்தரவிட்டார். அதில், சீனிவாசன் வீடியோவில் பேசியது உண்மை என்று தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து, அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதாக ஒப்பு கொண்டதாலும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் நேற்று சீனிவாசனை கோட்ட மேலாளர் கீதாராணி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் அந்த கடையின் மேற்பார்வையாளர் குமரனுக்கு இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story