இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்தவர்களால் பரபரப்பு
இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்தவர்களால் பரபரப்பு
திருப்பூர்:
இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு திருப்பூர் கலெக்டர்அலுவலகத்திற்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
மண்எண்ணெய் பாட்டில்
திருப்பூர் அருகே ஊத்துக்குளி தென்முகம் காங்கேயம்பாளையம் அண்ணமார் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் 20 பேர் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் வரும்போது, சிறிய பாட்டிலில் மண்எண்ணெய் வைத்திருந்தனர்.
வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் அவர்கள் தீக்குளிக்க வந்தது தெரியவந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மண்எண்ணெய் பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரசு புறம்போக்கு நிலம்
பின்னர் அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். திருப்பூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் ஹமீதுவிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் அண்ணமார் நகரில் அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த இரண்டு வருடங்களாக 15 குடும்பத்தினர் குடிசை போட்டு குடியிருந்து வருகிறோம். ஏற்கனவே அந்த பகுதியில் 130 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறார்கள். நாங்கள் பலமுறை விண்ணப்பித்தும் எங்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்கப்படவில்லை.
வீட்டுமனை பட்டா
இந்தநிலையில் அந்த பகுதியில் வசிக்காத சம்பந்தமே இல்லாத 10 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு அளவீடு செய்யும் பணிகள் நடக்கிறது. ஆனால் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் குழந்தைகளுடன் குடியிருந்து வரும் எங்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்காமல் உள்ளனர். அதனால் எங்களுக்கு விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story