திண்டுக்கல் மாவட்டத்தில் வெளி மாவட்ட நபர்களுக்கு மதுபானம் விற்க தடை
திண்டுக்கல் மாவட்ட எல்லையோர டாஸ்மாக் கடைகளில் தளர்வுகள் இல்லாத வெளிமாவட்ட நபர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குஜிலியம்பாறை:
திண்டுக்கல் மாவட்ட எல்லையோர டாஸ்மாக் கடைகளில் தளர்வுகள் இல்லாத வெளிமாவட்ட நபர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் திறப்பு
கொலைகார கொரோனா வைரசின் 2-வது அலை தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. பல உயிர்களையும் பறித்துவிட்டது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டங்களாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன.
இதற்கிடையே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டுமின்றி சலூன், டீக்கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டாஸ்மாக் கடைகளையும் திறக்க அரசு உத்தரவிட்டது.
அதன்படி நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் ஒரு மாதத்திற்கு மேலாக மது குடிக்காமல் இருந்து வந்த மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க குவிந்தனர்.
படையெடுத்த மதுப்பிரியர்கள்
ஆனால் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அந்த மாவட்டங்களை சேர்ந்த மதுப்பிரியர்கள் அண்டை மாவட்ட எல்லைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தின் அண்டை மாவட்டங்களான திருப்பூர், கரூரில் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் திருப்பூர், கரூரை சேர்ந்த மதுப்பிரியர்கள் திண்டுக்கல் மாவட்ட எல்லைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க குவிந்தனர். இதனால் மாவட்டத்தின் எல்லைகளான குஜிலியம்பாறை, சாமிநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் மதுப்பிரியர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி தரையில் வட்டம் வரையப்பட்டு இருந்தாலும், மதுப்பிரியர்கள் மதுபானத்தை வாங்கும் ஆர்வத்தில் சமூக இடைவெளியின்றி முண்டியடித்து கொண்டு வரிசையில் நின்றனர். இதனால் வெளிமாவட்ட நபர்கள் மூலம் திண்டுக்கல்லில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டதாக பல்வேறு தரப்பினர் வேதனை தெரிவித்தனர்.
ஆதார் கார்டு கட்டாயம்
இந்தநிலையில் நேற்று மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி வெளி மாவட்ட நபர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டது. மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு வரும் நபர்கள் கண்டிப்பாக ஆதார் கார்டு வைத்திருப்பதுடன், குடைபிடித்தபடி வந்தால் மட்டுமே மதுபானம் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குஜிலியம்பாறை அருகே கரூர் மாவட்ட எல்லையில் உள்ள தி.கூடலூர், ஆர்.வெள்ளோடு, சேர்வைக்காரன்பட்டி மற்றும் பழனி அருகே திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள அய்யம்பாளையம், பாப்பம்பட்டி, சாமிநாதபுரம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வருபவர்கள் ஆதார் கார்டுடன் குடைபிடித்தபடி வர வேண்டும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
அவ்வாறு வழிமுறைகளை பின்பற்றி வந்தவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்பட்டது. இருப்பினும் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான நபர்கள் மதுபானம் வாங்க வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
Related Tags :
Next Story