திண்டுக்கல் அருகே பெயிண்டர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது
திண்டுக்கல் அருகே பெயிண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே பெயிண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெயிண்டர் கொலை
திண்டுக்கல் மாலப்பட்டியை அடுத்த சங்கணம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 32). அவருடைய நண்பர் கங்காதரன் (32). நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும், திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலை மாலப்பட்டி பிரிவு அருகே நடந்து சென்றனர்.
அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவர்கள் 2 பேரையும் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் கருப்பையா பரிதாபமாக உயிரிழந்தார். கங்காதரனுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய், ஜெய்கணேஷ் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
3 பேர் கைது
தனிப்படை போலீசார், திண்டுக்கல் அருகே உள்ள இரண்டெல்லப்பாறை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரண்டெல்லப்பாறை குளம் அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் வடக்கு மாலபட்டியை சேர்ந்த சிரஞ்சீவி (36), அவருடைய அண்ணன் முருகேசன் (41) மற்றும் சங்கணம்பட்டியை சேர்ந்த மற்றொரு முருகேசன் (35) என்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் இவர்களுக்கு, கருப்பையா கொலை வழக்கில் ெதாடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
காரணம் என்ன?
கொலை செய்யப்பட்ட கருப்பையாவுடன் இணைந்து, கைதான 3 பேரும் பெயிண்டர் வேலை செய்து வந்தனர். அப்போது சம்பளத்தை பிரிப்பதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் கருப்பையாவை தீர்த்து கட்டியதாகவும், அதனை தடுக்க வந்த கங்காதரனையும் கத்தியால் குத்தியதாகவும் கைதான 3 பேரும் போலீசாரிடம் தெரிவித்தனர். கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்த தனிப்படையினரை, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பாராட்டினார்.
Related Tags :
Next Story