ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு புறப்பட்ட மீனவர்கள்


ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு புறப்பட்ட மீனவர்கள்
x
தினத்தந்தி 15 Jun 2021 10:57 PM IST (Updated: 15 Jun 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

61 நாட்கள் தடைகாலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு புதுச்சேரி மீனவர்கள் செல்ல தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரி, ஜூன்.16-
61 நாட்கள் தடைகாலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு புதுச்சேரி மீனவர்கள் செல்ல தொடங்கியுள்ளனர்.
மீன்பிடி தடைகாலம்
கடலில் மீன் வளத்தைப் பெருக்க     ஏப்ரல்  மாதம் 15-ம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ம் தேதி   வரை   வங்கக் கடலில்   மீன்பிடி   தடைக் காலம் அமல்படுத்தப்படுகிறது. தடைகாலம் காரணமாக கடந்த 2 மாதங்களாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.
படகுகள் சீரமைப்பு
இந்த நிலையில் விசை படகுகள் அனைத்தும் மீன்பிடி துறைமுகங்களில் ஓய்வெடுத்தன. இந்த தடை காலத்தில் படகு மற்றும் வலைகளை சீர் செய்தல் போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
விசைப்படகுகள் தவிர்த்து நாட்டு படகுகளில் கடலில் குறைந்த தூரத்துக்கு சென்று மீனவர்கள் வலைவீசி  மீன் பிடித்து வந்து விற்பனை செய்தனர். இதனால் மீன்களுக்கு கிராக்கி ஏற்பட்டு, விலை உயர்ந்து காணப்பட்டது.
மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
இந்த நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால் புதுச்சேரி தேங்காய்திட்டு  மீன்பிடி  துறை முகத்தில் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு தயாராகினர். 
கடலில் தங்கி மீன்பிடிப்பதால்,   மீன்கள்   கெட்டுப் போகாமல் இருக்க  படகுகளில் ஐஸ் கட்டிகளை நிரப்பினர். வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை நேற்று மாலையே ஏற்றத் தொடங்கினார்கள்.  படகை  இயக்கு வதற்கான  எரிபொருளை நிரப்பி, ஒரு சிலர் இரவிலேயே ஆழ்கடல்  மீன் பிடிப்புக்கு சென்றனர்.
மீன்கள் விலை குறையும்
பெரும்பாலான மீனவர்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை முதல் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு செல்கின்றனர். மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு செல்வதால் இனி வரும் காலங்களில் மீன்களின் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story