திண்டுக்கல் மாவட்டத்தில் மளிகை பொருட்கள் தொகுப்புடன் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வினியோகம்


திண்டுக்கல் மாவட்டத்தில் மளிகை பொருட்கள் தொகுப்புடன் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வினியோகம்
x
தினத்தந்தி 15 Jun 2021 11:00 PM IST (Updated: 15 Jun 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1,035 ரேஷன் கடைகள் மூலம், மளிகை பொருட்கள் தொகுப்புடன், ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி தொடங்கியது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1,035 ரேஷன் கடைகள் மூலம், மளிகை பொருட்கள் தொகுப்புடன், ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி தொடங்கியது. 
நிவாரண தொகை
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக 2-வது தவணையாக மேலும் ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. 
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் 6½ லட்சம் அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 1,035 ரேஷன்கடைகள் மூலம் ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. 
அமைச்சர் இ.பெரியசாமி
அதன்படி, திண்டுக்கல் அருகே கன்னிவாடி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்கினார். 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. காசிசெல்வி, தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஸ்பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
அமைச்சர் அர.சக்கரபாணி
பழனி அருகே புஷ்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வயலூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். 
இந்த நிகழ்ச்சியில் பழனி ஆர்.டி.ஓ. ஆனந்தி, தலைமை பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான வெங்கிடுசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் பொன்ராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிகரசுதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
பின்னர் தாளையூத்து, கொழுமம்கொண்டான், போதுப்பட்டி, மேல்கரைப்பட்டி, கீரனூர், மரிச்சிலம்பு, பூலாம்பட்டி ஆகிய பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்கினார். 
வேலுசாமி எம்.பி.
இதேபோல் சாணார்பட்டி அருகே கோபால்பட்டியில் உள்ள கூட்டுறவு வங்கியில் நடந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் எம்.பி. வேலுசாமி தலைமை தாங்கி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்கினார். 
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், மாவட்ட கவுன்சிலருமான விஜயன், சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் தர்மராஜன், மோகன், சாணார்பட்டி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராமதாஸ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
இதேபோல் நொச்சியோடைப்பட்டி, கொசவபட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளிலும் கொரோனா நிவாரணை தொகை மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி வேலுச்சாமி எம்.பி. தலைமையில் நடைபெற்றது. 
காந்திராஜன் எம்.எல்.ஏ.
வேடசந்தூர், மாரம்பாடி, மல்வார்பட்டி, விருதலைப்பட்டி, கல்வார்பட்டி, அழகாபுரி ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் 2-வது தவணை கொரோனா நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. இதற்கு வேடசந்தூர் எம்.எல்.ஏ. எஸ்.காந்திராஜன் தலைமை தாங்கி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். 
இந்த நிகழ்ச்சிகளில் கரூர் எம்.பி. ஜோதிமணி, கூட்டுறவு சார் பதிவாளர் சவுந்தரராஜன், வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரியம் எஸ்.நடராஜன், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் ஜீவா, நகர செயலாளர் கார்த்திகேயன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவிசங்கர், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் சாமிநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தமிழ்செல்வி ராமச்சந்திரன், வேடசந்தூர் தி.மு.க. பிரமுகர் டி.பெருமாள், தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் ஆரோன், மாணவர் அணி முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் பி.பொன்ராம் மற்றும் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.  

Next Story