கொரோனா 3-வது அலை எதிரொலி: அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு அமைக்கும் பணி தீவிரம்
கொரோனா 3-வது அலை எதிரொலியாக கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர்,
கொரோனா முதல் அலையை விட 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த கோர தாக்குதலுக்கு கடலூர் மாவட்டத்தில் 55 ஆயிரத்தை கடந்து விட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை 700-யை நெருங்கி விட்டது.
இந்நிலையில் 3-வது அலை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2-வது அலையை போலவே 3-வது அலையும் கோரமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகளை இந்த 3-வது அலை தாக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் 3-வது அலை வந்தால் அதை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்து வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக அனைத்து மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ மனைகளில் கூடுதலாக படுக்கை வசதிகள், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகள், தேவையான மருத்துவ சாதனங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான வார்டு
அதன்படி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 30 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 70 படுக்கை வசதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 8 டாக்டர்கள், 25 செவிலியர்கள் பணியாற்ற உள்ளனர்.
இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம் அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதிகள் உட்பட அனைத்து வசதிகளும் இருக்கும் என்று மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ் பாபு தெரிவித்தார்.
Related Tags :
Next Story