திருவரங்குளம் அருகே 4 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை


திருவரங்குளம் அருகே 4 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை
x
தினத்தந்தி 15 Jun 2021 11:13 PM IST (Updated: 15 Jun 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

திருவரங்குளம் அருகே 4 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருவரங்குளம், ஜூன்.16-
திருவரங்குளம் அருகே 4 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள பொற்பனைக்கோட்டையை அடுத்த வடக்கு இ்ம்மநாம்பட்டியை சேர்ந்தவர் ரெங்கப்பன். இவரது மனைவி வீரம்மாள் (வயது 70). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இதில் 3 மகள்களும் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். மகனும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். ரெங்கப்பன் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் வீரம்மாள் மட்டும், இங்குள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
கொலை
இந்த நிலையில் நேற்று வீரம்மாளின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது, வீரம்மாளின் தலையில் காயம் இருந்தது. மேலும் அவர் அணிந்து இருந்த தங்க சங்கிலி, தோடு உள்பட 4 பவுன் நகைகளை காணவில்லை. வீரம்மாள் தனியாக இருந்ததை அறிந்த மர்மநபர்கள் வீடு புகுந்து, அவரை தாக்கி, கழுத்தை நெரித்து கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்றதாக தெரிகிறது.
2 பேரை பிடித்து விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராதிகா, புதுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா ஆகியோரும் சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்டனர். போலீஸ் மோப்ப நாய் தீரன் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிதுதூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் முக்கிய தடயங்களை சேகரித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இதே பகுதியில் ஒரு மூதாட்டி உடலில் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இதுபற்றி சம்பந்தப்பட்டவர்கள் போலீசில் புகார் தெரிவிக்காமல் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்பகுதியில் மேலும் ஒரு மூதாட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story