கல்வராயன்மலையில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் சிறுவர் பூங்கா


கல்வராயன்மலையில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் சிறுவர் பூங்கா
x
தினத்தந்தி 15 Jun 2021 11:19 PM IST (Updated: 15 Jun 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் சிறுவர் பூங்கா


கச்சிராயப்பாளையம்

கச்சிராயபாளையம் அருகே உள்ள கல்வராயன் மலை ஏழைகளின் சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு பெரியார், மேகம், கவியம் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன. நீர்வீழ்ச்சிகளில் ஆர்ப்பரித்து பாயும் வெள்ளத்தில் குளித்து மகிழ்வதற்காக கள்ளக்குறிச்சி மட்டுமின்றி விழுப்புரம், கடலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வருவது உண்டு. அதேபோல் படகு சவாரி செய்வதற்காக இங்கு படகு குழாம், குழந்தைகள் விளையாடி மகிழ சிறுவர் பூங்கா ஆகியவையும் இங்கு உள்ளன. 

சிறுவர் பூங்கா கரியாலூரில் கடந்த 12.7.2014 அன்று சுற்றுலாத்துறை மற்றும் கலை பண்பாட்டுத்துறை சார்பில் ரூ.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு அதன் பராமரிப்பு பணியை ஊரக வளர்ச்சித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பூங்காவில் சிறிய ராட்டினம், ஊஞ்சல், சறுக்குகள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. இதில் தங்களின் செல்ல குழந்தைகள் விளையாடி மகிழ்வதை கண்டு பெற்றோர்கள் மனம் பூரிப்படைவார்கள். மேலும் நிழற்குடைகள், செயற்கை நீரூற்றுகள், நடைப்பயிற்சி பாதை ஆகியவையும் உள்ளன. 

ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் சிறுவர் பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது. இ்ங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்தும், உடைந்தும் காணப்படுகிறது. நடை பயிற்சிக்காக அமைக்கப்பட்ட பாதையிலும், செயற்கை நீரூற்றை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போன்று காட்சி அளிக்கிறது. 
தற்போது கொரோனா காலமாக இருப்பதால் பூங்காவுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை சாதாகமாக பயன்படுத்திக்கொண்டு சமூக விரோதிகள் பூங்காவுக்குள் அத்துமீறி புகுந்து மது அருந்துவது, மது அருந்திய பின்னர் காலி மதுபாட்டில்களை அங்கேயே போட்டு உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இதனால் சிறுவர் பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே சிறுவர் பூங்காவை பராமரித்து உடைந்த மற்றும் பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு சமூக விரோதிகள் உள்ளே புகுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.








Next Story