பொள்ளாச்சியில் ரெயில்வே மேம்பால பணிகள் தாமதம்
தொழிலாளர்கள் பற்றாக்குறை, கட்டுமான பொருட்கள் வராததால் பொள்ளாச்சியில் ரெயில்வே மேம்பால பணிகள் தாமதமாகி வருகிறது.
பொள்ளாச்சி
தொழிலாளர்கள் பற்றாக்குறை, கட்டுமான பொருட்கள் வராததால் பொள்ளாச்சியில் ரெயில்வே மேம்பால பணிகள் தாமதமாகி வருகிறது.
ரூ.50 கோடியில் மேம்பாலம்
பொள்ளாச்சி பாலக்காடு ரோடு வடுகபாளையம் பிரிவில் சாலையின் குறுக்கே பொள்ளாச்சி-போத்தனூர் ரெயில் பாதை செல்கிறது.
இதன் காரணமாக ரெயில் வரும்போது ரெயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதை கருத்தில் கொண்டு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வடுக பாளையம் பிரிவில் ரெயில்வே மேம்பால கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் ரூ.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
மேலும் ரெயில்வே துறை மூலம் தண்டவாள பகுதியில் ரூ.5 கோடியில் மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த பணிகள் தொடங்கி வேகமாக நடைபெற்று வந்தது.
பணிகள் தாமதம்
இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கட்டுமான பொருட்கள் வராமலும், தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பணிகள் தாமதமாகி உள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி வடுகபாளையம் பிரிவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க 18 தூண்கள் அமைக்க வேண்டும். தற்போது அனைத்து தூண்களும் அமைக்கப் பட்டு விட்டன.
850 மீட்டர் தூரத்திற்கு 4 வழிச் சாலையுடன் மேம்பாலம் கட்டப்படுகிறது. இதை தவிர 5½ மீட்டர் அகலத்தில் சர்வீஸ் ரோடு அமைக்கப்படுகிறது.
80 சதவீதம் நிறைவு
வீடுகள், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் எளிதில் செல்லும் வகையில் சாக்கடை கால்வாய் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.
தற்போது பாலம் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. ரெயில்வே தண்டவாள பகுதியில் மட்டும் பணிகள் நடைபெற வேண்டிய உள்ளது.
இதற்கிடையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் பெரும்பாலும் ஊருக்கு சென்று விட்டனர்.
தற்போது குறைவான தொழிலாளர்களை வைத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
விரைவில் முடிக்க நடவடிக்கை
மேலும் ஊரடங்கு காரணமாக கட்டுமான பொருட்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பணிகள் தாமதமாகி உள்ளது.
தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story