பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு படையெடுக்கும் மதுபிரியர்கள்
பொள்ளாச்சியில் இருந்து 128 கி.மீ. தூரம் கொண்ட திண்டுக்கல்லுக்கு மதுபானங்கள் வாங்க மதுபிரியர்கள் படையெடுத்து வருகிறார்கள்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் இருந்து 128 கி.மீ. தூரம் கொண்ட திண்டுக்கல்லுக்கு மதுபானங்கள் வாங்க மதுபிரியர்கள் படையெடுத்து வருகிறார்கள்.
டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
இதற்கிடையில் தொற்று அதிகமாக கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.
அதன்படி மதுக்கடைகள் திறக்கப்பட்டன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறந்து விற்பனை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
திண்டுக்கல்லுக்கு படையெடுப்பு
இதன் காரணமாக பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுபிரியர்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு படையெடுக்க தொடங்கி விட்டனர்.
கார்கள், மோட்டார் சைக்கிள்களில் சென்று ஒவ்வொரு கடையாக தேடி கூட்டம் குறைவாக இருந்த கடைகளுக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கினர்.
மாவட்டத்திற்கு வெளியே பயணிப்பதற்கு இ-பதிவு தேவை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இ-பதிவு நடைமுறையில் இருந்தும் போலீசார் மதுபிரியர்களை கண்டுகொள்ளவில்லை.
பொள்ளாச்சியில் இருந்து கோமங்கலம், அந்தியூர், மடத்துக்குளம், சாமிநாத புரம் ஆகிய சோதனை சாவடிகளை கடந்து திண்டுக்கல் சென்றனர். அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி மகிழ்ச்சியுடன் திரும்பினர்.
இதுகுறித்து மதுபிரியர்கள் கூறியதாவது:-
128 கி.மீ. தூரம்
ஊரடங்கை பயன்படுத்தி மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். ஒரு குவார்ட்டர் ரூ.500 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் கடந்த ஒரு மாதமாக டாஸ்மாக் கடைகள் எப்போது திறக்கும் என்று ஏக்கத்துடன் காத்திருந்தோம். ஆனால் மற்ற மாவட்டங்களில் திறந்தும், கோவையில் மதுக்கடைகள் திறக்காததால் ஏமாற்றம் அடைந்தோம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால், பொள்ளாச்சி பழனி ரோட்டில் 45 கி.மீ. தூரத்தில் உள்ள சாமிநாத புரத்தில் உள்ள மதுக்கடைக்கு சென்றோம்.
அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் பழனி, ஒட்டன்சத்திரம் என கடைசியில் திண்டுக்கல்லுக்கு சென்று பாட்டில்களை வாங்கினோம். இவ்வாறு மொத்தம் 128 கி.மீ. தூரம் சென்று மதுபாட்டில்கள் வாங்கி வந்துள்ளோம்.
நாங்கள் காலை 10 மணிக்கே அங்கு சென்றுவிட்டோம். ஆனால் பிற்பகல் 3 மணிக்கு தான் மதுபாட்டில் வாங்க முடிந்தது. அதுவும் எங்களுக்கு பிடித்த மதுவகைகள் கிடைக்கவில்லை.
இருந்தபோதிலும் வேறு வழியின்றி கிடைத்த மதுபானங்களை வாங்கி வந்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story