சமயபுரம் அருகே முன்விரோதத்தில் கூலித்தொழிலாளி குத்திக்கொலை; வாலிபர் கைது
சமயபுரம் அருகே முன்விரோதத்தில் கூலித்தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சமயபுரம்,
சமயபுரம் அருகே முன்விரோதத்தில் கூலித்தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
கூலித்தொழிலாளி
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள ராசையன்கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 50). கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் கட்டில் பின்னும் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த வேலுசாமியின் மகன் தியாகு (27) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு பாலகிருஷ்ணன் தனது வீட்டின் எதிரே அமர்ந்து இருந்தார்.
குத்திக்கொலை
அப்போது அங்கு குடிபோதையில் வந்த தியாகு, முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு பாலகிருஷ்ணனை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பாலகிருஷ்ணனை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு இருங்களூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கைது
மேலும், சம்பவ இடத்திற்கு லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் நேரில் வந்து பார்வையிட்டார். சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகுவை தேடிவந்தனர்.
இந்தநிைலயில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே பதுங்கி இருந்த தியாகுவை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story