அம்பை டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை
அம்பையில் டாஸ்மாக் கடையில் இரும்பு கம்பியை வளைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் மதுபாட்டில்களை கொள்ளையடித்துச்சென்றனர்.
அம்பை:
அம்பையில் டாஸ்மாக் கடையில் இரும்பு கம்பியை வளைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் மதுபாட்டில்களை கொள்ளையடித்துச்சென்றனர்.
டாஸ்மாக் கடை
நெல்லை மாவட்டம் அம்பை தென்காசி மெயின்ரோடு நுகர்பொருள் வாணிபக்கிடங்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இந்த மதுக்கடைக்கு வந்துள்ளனர்.
பின்னர் கடையின் பின்பக்க சுவரில் உள்ள கம்பி வேலியை உடைத்து உள்ளே புகுந்து ரூ.10 ஆயிரத்து 230 மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்துச்சென்றனர்.
விசாரணை
நேற்று காலை கடையை திறந்து உள்ளே சென்ற கடையின் மேற்பார்வையாளர் முருகன் பின்பக்க சுவர் வழியாக மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்து சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி உடனடியாக அம்பை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் கடையின் பின்புற சுவரில் உள்ள இரும்பு கம்பியை வளைத்து, சிமெண்டு சிலாப்பை உடைத்து உள்ளே புகுந்து மதுபாட்டில்களை அள்ளிச்சென்றது தெரியவந்தது.
ரூ.5 லட்சம் தப்பியது
நீண்ட நாட்களுக்கு பின் மதுக்கடை நேற்று முன்தினம் தான் திறக்கப்பட்டது. அன்றைய தினம் விற்பனையான தொகை ரூ.5 லட்சத்து 11 ஆயிரத்தை மேற்பார்வையாளர் வங்கியில் செலுத்துவதற்காக கையில் எடுத்துச்சென்று விட்டார். இதனால் அந்த பணம் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியது.
இந்த கொள்ளை குறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story