குமரியில் ரூ.2 ஆயிரம் நிவாரணம் மளிகை பொருட்கள் தொகுப்பு வினியோகம்
குமரி மாவட்டத்தில் 5¾ லட்சம் பேருக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம், மளிகை பொருட்கள் தொகுப்பு வினியோகத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 5¾ லட்சம் பேருக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம், மளிகை பொருட்கள் தொகுப்பு வினியோகத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
தொடங்கி வைத்தார்
குமரி மாவட்டத்தில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2-வது தவணை கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பு 5 லட்சத்து 94 ஆயிரத்து 834 பேருக்கு வழங்கப்படுகிறது.
இதன் தொடக்க நிகழ்ச்சி காட்டாத்துறையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நேற்று காலை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ரூ.2 ஆயிரம் நிவாரணம் மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வினியோகத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நெருக்கடி
மக்கள் நலன் காக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இது நெருக்கடியான காலம். அரசுக்கும், மக்களுக்கும் சவாலான நேரம். அரசு பொறுப்பேற்றபோது சுகாதார வசதிகள் இல்லை. மருத்துவமனையில் இடநெருக்கடி, ஆக்சிஜன் பற்றாக்குறை என பல நெருக்கடிகள் இருந்தன. தற்போது அனைத்தையும் சமாளித்துள்ளது நமது அரசு.
பொதுமக்களின் நலன் கருதி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.4000 நிவாரணம் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக நிவராண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-வது தவணை ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு குமரி மாவட்டத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
விதிமுறைகள்
குமரி மாவட்டத்தில் உள்ள 567 கூட்டுறவு துறை, 139 தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம், 20 மகளிர் அமைப்புகள், 3 மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் 47 இதர துறைகள் மூலம் மொத்தம் 776 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படுகிறது. 2-ம் கட்ட நிவாரணத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்குவதற்காக ரூ.110 கோடியே 97 லட்சம் ஒதுக்கப்பட்டது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் அரசின் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
தமிழக அரசின் நடவடிக்கையால், தற்போது, கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையை ஏற்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது அச்சுறுத்தலாக மாறிவிடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள்
நிகழ்ச்சியில், மண்டல இணைப்பதிவாளா் (கூட்டுறவு) குருமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சொர்ணராஜ், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுப்பையா, தக்கலை துணைப்பதிவாளர் பாலசுப்பிரமணியன், காட்டாத்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் ராஜூ, துணைத்தலைவர் டேனியல், ஊராட்சி மன்ற தலைவா்கள் இசையாஸ் (காட்டாத்துறை), ரெஜினி விஜிலா பாய் (கண்ணணூர்), பால்சன் (குமரன்குடி), ரூஷ் (ஏற்றக்கோடு) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கலெக்டர் அலுவலகத்தில்
அதைத்தொடர்ந்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கும் ரூ.2000 மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு ஆகியவற்றை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
அப்போது மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித், சுகாதார அதிகாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story