புதுமாப்பிள்ளையை குத்திக் கொன்ற 4 பேர் கைது


புதுமாப்பிள்ளையை குத்திக் கொன்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2021 2:30 AM IST (Updated: 16 Jun 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை குத்திக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலகிருஷ்ணன்புதூர்:
நாகர்கோவில் அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை குத்திக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுமாப்பிள்ளை கொலை
நாகர்கோவில் அருகே பறக்கை, சர்ச் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 24), கொத்தனார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலை சேர்ந்த ரேஷ்மா (20) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். 
நேற்று முன்தினம் மாலை அய்யப்பனும், அவரது நண்பர் பறக்கை எம்.எம்.பி. தெருவை சேர்ந்த சந்தோஷ் (24) என்பவரும் பறக்கை ஒன்னாம் நம்பர்குளம் வலிகொலி அம்மன் கோவில் அருகே அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்ட போது 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த கும்பல் திடீரென அய்யப்பனை சுற்றி வளைத்து சரமாரியாக கத்தியால் குத்தியது. இதை தடுக்க முயன்ற சந்தோசுக்கும் கத்திக்குத்து விழுந்தது. கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் தப்பி ஓடி விட்டது.
இதில் அய்யப்பன் பரிதாபமாக இறந்தார். நண்பர் சந்தோஷ் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
4 பேர் கைது
இறந்த அய்யப்பன் உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று காலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்று தகனம் செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கொலையாளிகளை கைது செய்ய சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி இந்த கொலையில் ெதாடர்பு உடையதாக தெங்கம்புதூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே வசிக்கும் ஸ்டாலின் (31), ஆசாரிமார்தெருவை சேர்ந்த சுரேஷ் (32), உத்தண்டன் குடியிருப்பை சேர்ந்த பிரபு (32), வடலிவிளையை சேர்ந்த அய்யப்பன் (32) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மதுக்கடை திறந்த முதல்நாளில் இருதரப்பை சேர்ந்தவர்கள் மதுவை உற்சாகமாக குடித்து போதையில் இருந்ததாகவும், அதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்ததாகவும் தெரிகிறது. கைது ெசய்யப்பட்ட ஸ்டாலின் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
உறவினர்கள் மறியல்
 இதற்கிடையே இறந்த அய்யப்பனின் உறவினர்கள் நேற்று மாலை 3.30 மணியளவில் பறக்கை சந்திப்பில் குவிந்தனர். அவர்கள் கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அய்யப்பனின் மனைவிக்கு தகுந்த நிவாரண உதவி வழங்க வேண்டும். அவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்ேபாது கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்களிடம் போலீசார் தெரிவித்தனர். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story