மதுபோதை தகராறில் கீழே தள்ளி மிட்டாய் கடைக்காரர் கொலை


மதுபோதை தகராறில் கீழே தள்ளி மிட்டாய் கடைக்காரர் கொலை
x
தினத்தந்தி 16 Jun 2021 7:56 AM IST (Updated: 16 Jun 2021 8:10 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் மதுபோதை தகராறில் கீேழ தள்ளி மிட்டாய் கடைக்காரர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி குப்பாண்டி தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). இவருடைய தம்பி சந்துரு (24). நேற்று முன்தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் விக்னேஷ் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இரவு ஆத்துமேடு பகுதியில் மது அருந்தியுள்ளார். பின்னர் குடிபோதையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த அவருடைய தம்பி சந்துரு (24), விக்னேஷிடம் மது அருந்தியது தொடர்பாக கேட்டுள்ளார்.

இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராகுல்ராஜ் (26) என்பவர் சந்துருவுக்கு ஆதரவாக விக்னேசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக விக்னேஷ் ஆத்திரமடைந்து ராகுல் ராஜ் மற்றும் அவருடைய நண்பர் அரவிந்தன் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ராகுல்ராஜ் தனது அண்ணன் கோகுல்ராஜுக்கு (28) செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோகுல்ராஜ் இதுதொடர்பாக விக்னேசிடம் தட்டி கேட்டுள்ளார். அப்போது அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது நடந்த கைகலப்பின்போது கோகுல்ராஜ் விக்னேசை பிடித்து தள்ளி உள்ளார். இதனால் தடுமாறிக் கீழே விழுந்த விக்னேஷின் தலை அங்கு கிடந்த கல் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ் மயங்கினார். இதைபார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது விக்னேஷ் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருப்பது உறுதியானது.

இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கோகுல்ராஜ் (வயது28), ராகுல்ராஜ் (26) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story