கொரோனா தடுப்பூசி செலுத்த அலைமோதிய மக்கள்
தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டபடி மக்கள் குவிந்தனர்.
தேனி:
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா 3-வது அலையும் உருவாகும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதே நேரத்தில் தமிழக அரசு தடுப்பூசி செலுத்தும் பணியையும் துரிதப்படுத்தி வருகிறது.
மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசியை இருப்பு வைக்காமல் துரிதமாக மக்களுக்கு செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தேனி மாவட்டத்தில் அரசு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலமாகவும், தடுப்பூசி மையங்கள் மூலமாகவும் மக்களிடம் சேர்க்கப்படுகிறது.
நேற்று முன்தினம் தேனி மாவட்டத்துக்கு சுமார் 13 ஆயிரம் டோஸ் தடுப்பூசி வந்தது. அவற்றை மக்களுக்கு செலுத்த சிறப்பு முகாம்களை சுகாதாரத்துறையினர் நடத்தினர்.
மக்கள் குவிந்தனர்
மாவட்டத்தில் நேற்று 27 இடங்களில் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு முகாம்களுக்காக 10 ஆயிரத்து 750 டோஸ் தடுப்பூசி பகிர்ந்தளிக்கப்பட்டன.
அதுபோல், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 8 மையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டன. இந்த மையங்களுக்கு 2,500 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. நேற்று ஒரே நாளில் செலுத்துவதற்காக மொத்தம் 13 ஆயிரத்து 200 டோஸ் தடுப்பூசி பகிர்ந்தளிக்கப்பட்டன.
அதன் மூலம் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பு வரை மக்களிடம் தடுப்பூசி குறித்த அச்சம் அதிக அளவில் காணப்பட்டது. ஆனால், தற்போது தடுப்பூசியின் தேவை மற்றும் அதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக தடுப்பூசி முகாம்களுக்கு மக்கள் படையெடுத்தனர். மாவட்டத்தில் பல இடங்களில் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டபடி, தடுப்பூசி செலுத்த மக்கள் குவிந்தனர்.
சமூக இடைவெளி
தேனி அல்லிநகரம் நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இருப்பினும், அங்கு சமூக இடைவெளியின்றி மக்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். தடுப்பூசி செலுத்தும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
Related Tags :
Next Story