சிறுமி தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை


சிறுமி தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை
x
தினத்தந்தி 16 Jun 2021 7:17 PM IST (Updated: 16 Jun 2021 7:17 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே சிறுமி தற்கொலை செய்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தேனி:


சிறுமி தற்கொலை
தேனி அருகே உள்ள வீருசின்னம்மாள்புரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 21). 

இவர், பூதிப்புரத்தை சேர்ந்த சிறுமியை காதலித்து திருமணம் செய்தார். இதனால், ராஜ்குமார் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே அந்த சிறுமி கர்ப்பிணியாக இருந்தார்.


இதையடுத்து ராஜ்குமாரும், அந்த சிறுமியும் கணவன், மனைவியாக வீருசின்னம்மாள்புரத்தில் வசித்து வந்தனர். சிறுமிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில் கடந்த 7-ந்தேதி சிறுமி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்த போது சிறுமிக்கு 17 வயதே பூர்த்தியாகி இருந்தது. 

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை
இளம்வயது திருமணம் செய்த சிறுமி தற்கொலை செய்தது குறித்து முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆகியோருக்கு மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.

 அதன்பேரில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று பூதிப்புரம், வீருசின்னம்மாள்புரம் ஆகிய இடங்களில் விசாரணை நடத்தினர். உயிரிழந்த சிறுமியின் வீட்டிலும் சென்று விசாரணை நடத்தினர். அவருடைய கணவர் மற்றும் உறவினர்களிடமும் விசாரித்தனர்.


இதில், போடி தாசில்தார் செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலா, மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட நன்னடத்தை அலுவலர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் கவிதா ஆகியோர் பங்கேற்றனர். 

இந்த விசாரணை குறித்த அறிக்கையை மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்துக்கு சமர்ப்பிக்க உள்ளதாக விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story