சின்னாளபட்டி பகுதியில் கீரை தோட்டங்களுக்கு படையெடுத்த ஆப்பிரிக்க ராட்சத நத்தைகள்


சின்னாளபட்டி பகுதியில் கீரை தோட்டங்களுக்கு படையெடுத்த ஆப்பிரிக்க ராட்சத நத்தைகள்
x
தினத்தந்தி 16 Jun 2021 9:01 PM IST (Updated: 16 Jun 2021 9:01 PM IST)
t-max-icont-min-icon

சின்னாளபட்டி பகுதியில் உள்ள கீரை தோட்டங்களுக்கு படையெடுத்த ஆப்பிரிக்க ராட்சத நத்தைகளால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சின்னாளபட்டி:
சின்னாளபட்டி பகுதியில் உள்ள கீரை தோட்டங்களுக்கு படையெடுத்த ஆப்பிரிக்க ராட்சத நத்தைகளால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
கீரை தோட்டங்கள்
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் பூக்களுக்கு அடுத்ததாக கீரை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு முருங்கை, அகத்தி, வெந்தய கீரை, மிளகு தக்காளி, சிறுகீரை, அரைக்கீரை, பொன்னாங்கன்னி என 15 வகையான கீரைகள் சாகுபடி செய்யப்படுகிறது. 
மேலும் இங்கு அறுவடை செய்யப்படும் கீரைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக முத்தழகுபட்டி, வெள்ளோடு பகுதிகளில் 80 சதவீத விவசாயிகள் கீரை வகைகளை சாகுபடி செய்கின்றனர். 
ஆப்பிரிக்க நத்தைகள்
ஆனால் கீரை சாகுபடியில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. கீரை விதைத்து முளைத்து வரும் போது அதிக மழை பெய்தால், கீரைகளில் தண்ணீர் தேங்கி அழுகி போய்விடும். மேலும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போவதும், அவ்வப்போது பல்வேறு பூச்சிகள் தாக்குவதும் கீரை விவசாயிகள் சந்திக்கும் பெரிய பிரச்சினைகளாக உள்ளன. 
இந்தநிலையில்  தற்போது சின்னாளபட்டி பகுதியில் புதிதாக ஆப்பிரிக்க ராட்சத நத்தைகள் கூட்டம், கூட்டமாக படையெடுத்து கீரைகளை தாக்கி வருகிறது. அதுவும் கீரை பயிர்களை தண்டு பகுதியில் இருந்து இலை நுனி வரை தின்று தீர்த்துவிடுகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் அவற்றை கட்டுப்படுத்த முடியாமலும் தவித்து வருகின்றனர். 
நடவடிக்கை
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் நிக்கோலஸ் கூறும்போது, ஈரப்பதம் உள்ள அனைத்து வகை கீரை தோட்டங்களுக்குள் ஆப்பிரிக்க ராட்சத நத்தைகள் தற்போது படையெடுத்துள்ளன. இந்த வகை நத்தைகள், சாதாரண வகை நத்தைகள் போன்று இல்லாமல் அளவில் பெரியதாக இருக்கின்றன. முத்தழகுபட்டி பகுதியில் உள்ள கீரை தோட்டங்களில் எப்போதும் ஈரப்பதம் உள்ளதால் கடந்த சில வாரங்களாகவே இந்த நத்தைகள் கீரைகளை நாசம் செய்து வருகின்றன. நத்தை ஓடுகள் தோட்டத்தில் குவிந்து கிடப்பதால் விவசாயிகளின் கால்களை பதம் பார்க்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை துறையினர் இணைந்து கீரை தோட்டங்களில் படையெடுத்துள்ள ஆப்பிரிக்க ராட்சத நத்தைகளை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Next Story