15 வேலம்பாளையத்தில் தடுப்பூசிக்காக 3-வது நாளாக பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
15 வேலம்பாளையத்தில் தடுப்பூசிக்காக 3வது நாளாக பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
அனுப்பர்பாளையம்
15 வேலம்பாளையத்தில் தடுப்பூசிக்காக தொடர்ந்து 3-வது நாளாக பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். நள்ளிரவு 2 மணி முதல் காத்திருந்தும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் பரிதாபம் நிகழ்ந்து வருகிறது.
பொதுமக்கள் அலைக்கழிப்பு
திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இங்கு தொடர்ந்து 3 நாட்களாக பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 14-ந்தேதி அந்த மையத்தில் தடுப்பூசிகளை முழுமையாக போடவில்லை என்று அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த பின்னரே தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் தடுப்பூசி இருப்பு தொடர்பான முறையான அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால் 100-க்கும் மேற்பட்டோர் அதிகாலை முதல் காத்திருந்த நிலையில் காலை 8 மணிக்கு மேல் வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று தடுப்பூசி இல்லை என்று தெரிவித்த உடன் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் நேற்று 15 வேலம்பாளையம் தடுப்பூசி மையத்திற்கு 530 கோவிஷீல்டு மற்றும் 110 கோவாக்சின் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளது தொடர்பான அறிவிப்பு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
அதிகாலை 2 மணி முதல் காத்திருப்பு
இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு 2 மணி முதல் 15 வேலம்பாளையம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் பள்ளி முன்பு வந்து காத்திருக்க தொடங்கினர். காலை 7 மணிக்கு 300-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நிற்க தொடங்கினார்கள். ஆனால் 10 மணி வரை யாரும் அங்கு பணிக்கு வரவில்லை. மேலும் பலமணி நேரம் காத்திருந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைமறியல் செய்வதென முடிவு செய்தனர்.
இதையடுத்து அங்கு 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது தடுப்பூசி மற்றும் டோக்கன் வழங்குவது தொடர்பாக பொதுமக்கள் தினமும் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்தனர். மேலும் தற்போது 350-க்கும் மேற்பட்டவர்கள் அதிகாலை முதல் காத்திருப்பதால் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு 100 பேருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு டோக்கன் வழங்கி திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.
வாக்குவாதம்
இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் புலம்பியபடி வீடுகளுக்கு திரும்பிச்சென்றனர். இதேபோல் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பழங்கரை, வேலாயுதம்பாளையம், கணியாம்பூண்டி ஆகிய 3 ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 180 பேருக்கு நேற்று தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த அம்மாபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் முதலில் இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி போடுங்கள் என்று கூறி சுகாதாரத்துறை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாளை (இன்று) இப்பகுதி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story