நாகர்கோவிலில் தடுப்பூசி மையத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை


நாகர்கோவிலில் தடுப்பூசி மையத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை
x
தினத்தந்தி 16 Jun 2021 11:23 PM IST (Updated: 16 Jun 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. டோக்கன் கிடைக்காததால் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. டோக்கன் கிடைக்காததால் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தடுப்பூசி முகாம்
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு 12 ஆயிரத்து 500 கோவிஷீல்டு டோஸ், 3 ஆயிரம் கோவேக்சின் டோஸ் வந்திருந்தது. இதனால் நேற்று நாகர்கோவிலில் 6 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 36 இடங்களில் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டது. இந்த மையங்களில் கூட்டம் அலைமோதியது. 
நாகர்கோவிலில் கோட்டார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பள்ளி, கார்மல் பள்ளி மற்றும் கோணம் கேந்திர வித்யாலயா ஆகிய இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. இதில் கவிமணி பள்ளியில் 2-ம் கட்ட தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டது. இந்து கல்லூரி, எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி மற்றும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி ஆகிய இடங்களில் கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக பொதுமக்கள் காலை 6 மணியில் இருந்தே தடுப்பூசி மையங்களில் குவிந்தனர்.
போலீசாருடன் வாக்குவாதம்
கோட்டார் கவிமணி பள்ளியில் ஏராளமான மக்கள் திரண்டதால் பள்ளிக்கூட வாசலில் இருந்து சவேரியார் ஆலயம் வரை நீண்ட வரிசையில் நின்றனர். தொடர்ந்து 7.30 மணிக்கு அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் டோக்கன் பெற்றுக்கொண்ட மக்கள் மட்டும் முகாமுக்கு அனுமதிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இங்கு 2-வது டோஸ் மட்டும் செலுத்தப்பட்டதால் சுமூகமாக சென்றது. 
அதே சமயம் கார்மல் பள்ளியில் திரண்டிருந்த பொதுமக்களில் முதலில் வந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் வந்த பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் திடீரென பள்ளியின் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். அதில் ஒருவா் சாைலயில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா். இதுபற்றி தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் உடன்பாடு ஏற்படவில்லை. மாறாக போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கூடுதலாக 100 டோஸ்
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேசினர். கார்மல் பள்ளிக்கு ஏற்கனவே 500 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து கூடுதலாக 100 தடுப்பூசிகளை வரவழைத்து பொதுமக்களுக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பிறகு போலீசாருடன் வாக்குவாதம் செய்த பொதுமக்கள் டோக்கன் வாங்கி கொண்டு வரிசைக்கு சென்றனர். இதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்டு இருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. இதே போல மாவட்டம் முழுவதும் சில தடுப்பூசி மையங்களில் பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story