ஒரே நாளில் சோலையார் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்வு
வால்பாறையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஒரே நாளில் சோலையார் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது.
வால்பாறை,
வால்பாறையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஒரே நாளில் சோலையார் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது.
தொடர் மழை
கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று 5-வது நாளாக வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை முதலே அவ்வபோது கனமழை பெய்து வந்தது. மேலும் மழையுடன் பலத்த காற்றும் வீசியது.
தொடர் மழையின் காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றன. கடை வீதிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்தவர்கள் குடைப்பிடித்தப்படி சென்றதை காணமுடிந்தது. தொடர் மழையின் காரணமாக வால்பாறை வனப்பகுதியில் ஆங்காங்கே புதிய அருவிகள் உருவாகி உள்ளன.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் அக்காமலை கருமலை எஸ்டேட் பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக கருமலை ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது.
சின்னக்கல்லாரில் மழையின் காரணமாக அணையின் சுரங்க கால்வாய் வழியாக சோலையார் அணைக்கு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. இங்கிருந்து வினாடிக்கு 1,614 கனஅடி தண்ணீர் சோலையார் அணைக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேபோல் நீரார் அணையில் இருந்து வினாடிக்கு 151 கனஅடி தண்ணீர் சுரங்க கால்வாய் வழியாக சோலையார் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் வெள்ளமலை எஸ்டேட் சுரங்க கால்வாயின் வாயில் பகுதியில் வெளியேறி வெள்ளமலை ஆற்றில் கலந்து சோலையார் அணைக்கு செல்கிறது.
ஒரே நாளில் 8 அடி உயர்வு
மழையின் காரணமாக 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையார் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி நிலவப்படி சோலையார் அணையின் நீர்மட்டம் 73 அடியாக இருந்தது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்தது. அதாவது நீர்மட்டம் 65 அடியில் இருந்து 73 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் 5-வது நாளாக சோலையார் மின் நிலையம்-1 இயக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு 42 மெகாவாட் மின் சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மின்உற்பத்திக்கு பின் 426 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
பச்சை தேயிலை உற்பத்தி குறைவு
இந்த கனமழை காரணமாக வால்பாறை வட்டார பகுதி முழுவதும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் எஸ்டேட் பகுதியில் பச்சை தேயிலை உற்பத்தியும் குறைந்து உள்ளது. எனவே பல்வேறு எஸ்டேட் நிர்வாகங்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மதியம் 2 மணி வரை மட்டும் பணி வழங்கினர்.
ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பு ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தொடர் மழை காரணமாகவும் வால்பாறை பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழையளவு
வால்பாறையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- சின்னக்கல்லார்- 107, நீரார்- 100, வால்பாறை-39, சோலையார் அணை- 52, பொள்ளாச்சி-5, சுல்தான்பேட்டை-12 மழையும் பதிவானது.
சோலையார் அணைக்கு வினாடிக்கு 2,822 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மின் உற்பத்திக்காக அணையில் இருந்து 426 கனஅடி தண்ணீர் சோலையார் மின் நிலையத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story