கழிவறையில் பதுக்கி வைத்த 1,162 மது பாட்டில்கள் பறிமுதல்
மார்த்தாண்டம் அருகே கழிவறையில் பதுக்கி வைத்திருந்த 1,162 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய பார் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே கழிவறையில் பதுக்கி வைத்திருந்த 1,162 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய பார் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ரகசிய தகவல்
தமிழகத்தில் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடக்கிறது. ஆனால், இரவு நேரங்களில் மதுபிரியர்களுக்கு மது கிடைப்பது அரிதாகி உள்ளது.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஆங்காங்கே சிலர் பகலில் மதுவை வாங்கி மறைத்து வைத்து விட்டு இரவில் அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் மார்த்தாண்டம் அருகே இளஞ்சிறை பகுதியில் இரவில் மது விற்பனை நடப்பதாக தக்கலை மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மது பாட்டில்கள் பறிமுதல்
அதை தொடர்ந்து மது விலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், கிரிஸ்டல் விஜி மற்றும் போலீசார் இளஞ்சிறை பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் அந்த பகுதியில் விசாரணை நடத்தியபோது இளஞ்சிறை டாஸ்மாக் கடை அருகே உள்ள ஒரு பாரில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு செல்வதற்குள் பார் உரிமையாளர் இளஞ்சிறை ஆசாரிவிளை பகுதியை சேர்ந்த ஷாஜி (வயது40) என்பவர் தப்பி ஓடி விட்டார். போலீசார் அங்கு சென்று சோதனையிட்ட போது கழிவறையில் அட்டை பெட்டிகளில் 1,162 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஷாஜியை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story