எருமப்பட்டி அருகே குடும்ப தகராறில் மனைவி, மைத்துனரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சி-ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கைது


எருமப்பட்டி அருகே குடும்ப தகராறில் மனைவி, மைத்துனரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சி-ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கைது
x
தினத்தந்தி 17 Jun 2021 12:02 AM IST (Updated: 17 Jun 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி அருகே குடும்ப தகராறில் மனைவி, மைத்துனரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

எருமப்பட்டி:
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்
ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் மதிவண்ணன் (வயது 38). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தற்போது பெருந்துறையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மகள் பானுப்பிரியா (30) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 
இந்த தம்பதிக்கு கரிஷ்மா (9) என்ற மகளும், குருபிரசாத் (6) என்ற மகனும் உள்ளனர். மதிவண்ணனுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி காலை மதிவண்ணனுக்கும், பானுப்பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மதிவண்ணன் வேலைக்கு சென்று விட்டார். தகராறு காரணமாக ஆத்திரத்தில் இருந்த பானுப்பிரியா கோபித்து கொண்டு எருமப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். 
சுட்டுக்கொல்ல முயற்சி
வேலையை முடித்துவிட்டு மதிவண்ணன் மாலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் மனைவி, குழந்தைகள் இல்லாததை கண்டு, பானுப்பிரியாவுக்கு போன் செய்தார். அப்போது பானுப்பிரியா தான் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் வந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மதிவண்ணன் அவர்களை பெருந்துறைக்கு வருமாறு கூறியுள்ளார். மேலும் பானுப்பிரியாவை பலமுறை தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். ஆனால் அவர் வரவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த மதிவண்ணன் நேற்று முன்தினம் பானுப்பிரியாவின் தம்பி விக்னேசுக்கு போன் செய்து பானுப்பிரியாவை அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த மதிவண்ணன் அவர்களை சுட்டுக்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார்.
மேலும் அன்று இரவு தனது வீட்டில் இருந்த இரட்டை குழல் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காரில் எருமப்பட்டிக்கு புறப்பட்டார். இதனை அறிந்த பானுப்பிரியா, தனது தம்பி விக்னேசுடன் சிங்களம் கோம்பையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தார். அப்போது அங்கு சென்ற மதிவண்ணன் வீட்டின் முன்பு நின்று கொண்டு சத்தம் போட்டுள்ளார். மேலும், மனைவி, மைத்துனரை துப்பாக்கியால் சுடுவதற்காக விசையை அழுத்தினார். ஆனால் துப்பாக்கியில்  இருந்து தோட்டா வெளியே வரவில்லை.
கைது
இந்த சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மதிவண்ணனை கைது செய்து, அவர் வைத்திருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
குடும்ப தகராறில் மனைவி, மைத்துனரை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுட்டுக்கொலை செய்ய முயன்ற சம்பவம் எருமப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story