சாராயம், மதுபாட்டில்கள் விற்ற 3 பேர் கைது கஞ்சா விற்ற 5 பேரும் சிக்கினர்
திட்டக்குடி பகுதியில் சாராயம், மதுபாட்டில்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் நெய்வேலியில் கஞ்சா விற்பனை செய்த 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
ராமநத்தம்,
திட்டக்குடி அடுத்துள்ள இ. கீரனூர் பகுதியில் திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புல்லூர் செல்லும் சாலையோரம் உள்ள வாய்க்கால் அருகே சாராயம் விற்பனை செய்த அதே ஊரை சேர்ந்த தங்கராசு மகன் தங்கதுரை (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் புலிவலம் புதிய பாலத்தின் கீழ் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்த கீழ்ஆதனூரை சேர்ந்த சுப்புராயன் மகன் வெங்கடேஷ் (46) என்பவரையும் திட்டக்குடி போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 38 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ராமநத்தம் அடுத்துள்ள பட்டாக்குறிச்சி பகுதியில் ராமநத்தம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது, வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்ததாக அதே ஊரை சேர்ந்த கலியமூர்த்தி மகன் வேல்முருகன் (40)என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 15 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்பனை
நெய்வேலி தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவழகி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாண்டவன்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த தாண்டவன் குப்பத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் இளங்கோவன் (34 ), அதே பகுதியை சேர்ந்த காசிலிங்கம் மகன் பாலமுருகன் (28) ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் 30-வது வட்டத்தில் கஞ்சா விற்ற அதேபகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் அய்யப்பன்(23), முருகன் மகன் விக்னேஷ் குமார் ( 27), மற்றும் 29-வது வட்டம் மோசஸ் சம்பத் மகன் பிரதீப் மோகன் (26 ) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 900 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story