ஒவ்வொரு குடும்பத்திற்கும், மத்திய அரசு கொரோனா நிவாரணமாக ரூ.7ஆயிரம் வழங்க வேண்டும் திருச்சியில் முத்தரசன் பேட்டி
ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு கொரோனா நிவாரணமாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என திருச்சியில் முத்தரசன் தெரிவித்தார்.
திருச்சி,
ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு கொரோனா நிவாரணமாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என திருச்சியில் முத்தரசன் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
7 பேர் விடுதலை
கொரோனா தொற்று 2-வது அலையால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு, அதனைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை.
மக்கள் நலப்பிரச்சினை குறித்து பேசுவதற்காக டெல்லி செல்லும் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். நிறுவனம் குறித்தும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாகவும் மத்திய அரசிடம் வலியுறுத்துவார் என நம்புகிறோம்.
ரூ.7 ஆயிரம் நிவாரணம்
இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் மத்திய அரசுக்கு அடிமை போல் செயல்பட வேண்டும் என்று விரும்புவது ஏற்றுக்கொள்ள முடியாது. ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக்கு மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
மத்திய அரசு தீட்டும் திட்டங்களுக்கு மாநில அரசு செயல்படுத்துவதற்கான நிதியை முழுமையாக வழங்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி ஆதாரங்களை முழுமையாக வழங்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகிறது. கச்சா விலை குறைந்திருந்த சூழலில் விலையை உயர்த்தி வழங்குவது மக்களை வாட்டி வதைப்பதாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் போடுகிற வரியை நீக்கினால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50 என்றும், டீசல் ரூ.40 எனவும் குறைந்த விலையில் வழங்க முடியும். மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொரோனா நிவாரணமாக குறைந்தபட்சம் தலா ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும்.
3 நாட்கள் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி இடதுசாரிகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து வருகிற 28, 29 மற்றும் 30-ந்தேதி ஆகிய 3 நாட்களில் தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் மற்றும் மருந்து பொருட்கள் விலையை குறைக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்துள்ளோம்.
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த நிலையில், கடந்த ஆட்சியாளர்களே ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தனர். தற்போதுள்ள அரசும் அதே நிலைப்பாட்டில் உள்ளது. எனவே, மத்திய அரசு தனது பிடிவாத நிலையை கைவிட வேண்டும். இல்லையென்றால் பொது மக்களும் தன்னெழுச்சியாக கிளர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் சூழல் ஏற்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story