குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகம்


குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகம்
x
தினத்தந்தி 17 Jun 2021 1:50 AM IST (Updated: 17 Jun 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த வயது மற்றும் அதிக மகசூல் கொண்ட குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகத்தை ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

தஞ்சாவூர்:
குறைந்த வயது மற்றும் அதிக மகசூல் கொண்ட குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகத்தை ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
நெல் ஆராய்ச்சி நிலையம்
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை யிலுள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் அம்பேத்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் மொத்த நெல் சாகுபடி பரப்பான 19.2 லட்சம் எக்டேரில் குறுகிய கால நெல் சாகுபடி பரப்பு 7.35 லட்சம் எக்டேர் ஆகும். இது மொத்த சாகுபடி பரப்பில் 38.2 விழுக்காடு கொண்டுள்ளதோடு 32 லட்சம் டன் நெல் உற்பத்தியைத் தருகிறது. கோடை, குறுவை, நவரை, சொர்ணவாரி பருவங்களில் ஏ.டி.டீ 36, ஏ.டி.டீ. 37, ஏஏ.எஸ்.டி. 16, ஏ.டி.டீ. 43, ஏ.டி.டீ. (ஆர்) 45, கோ 51 ஆகிய ரகங்கள் பயிர் செய்யப்படுகின்றன. இதில் ஏ.டி.டீ. 43 மிக சிறந்த சமையல் பண்புகளும் அரவை ஆலை ஏற்புத்திறனும் கொண்டுள்ளதால் பிரபல ரகமாக விளங்குகின்றது.
புதிய ரகம்
குறுகிய கால புதிய நெல் ரகங்களில் கோ 51 மட்டுமே விவசாயிகளின் தேர்வு ரகமாக இருக்கிறது. எனவே கோடை, குறுவை பருவங்களுக்கு புதிய தேர்வு ரகங்கள் மிகக் குறைவாக உள்ளது. தற்போது கோடை சாகுபடி பரப்பு அதிகரித்து இருப்பதாலும், குறுவை மற்றும் ஆண்டு முழுவதும்  திட்டமிட்ட மகசூல் நிர்ணயம் உள்ளதாலும், அதிக மகசூல் தரக்கூடிய, சாயாத தன்மை கொண்ட விற்பனைக்கு உகந்த காவிரி டெல்டா மண்டலத்திற்கு ஏற்புத் திறன் கொண்ட புதிய நெல் ரகம் விவசாயிகளின் எதிர்ப்பார்பாக உள்ளது. எனவே ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின், குறுவை, கோடை பருவங்களுக்கு ஏற்ற குறுகிய கால ஏடி.டீ. 53 நெல் ரகத்தை கடந்த 2019-ம் ஆண்டு வெளியிட்டது.
குறுவை சாகுபடிக்கு ஏற்ற ரகம்
இந்தப் புதிய ஏ.டி.டீ. 53 நெல் ரகம் 110 - 115 வயதுடையது. ஏ.டி.டீ 53 நெல் ரகம் ஏ.டி.டீ. 43, ஜே.ஜி.எல், 384 கலப்பிலிருந்து வம்சாவளி தேர்வு மூலம் உருவாக்கப்பட்டது. ஏ.டி.டீ 53 குறுகிய கால உயர் விளைச்சல் கொண்ட சன்ன ரகம் ஆகும்.
இந்த ரகம் கட்சிதமான செடி அமைப்பும். அடர்ந்த கதிர்களுடனும் தண்டுத்துளைப்பான். இலைமடக்குப் புழுவிற்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. மேலும் எக்ேடருக்கு 6,334 கிலோ சராசரி மகசூல் தரவல்லது. இது ஏ.டி.டீ 43யைக் காட்டிலும் 9.4 விழுக்காடும் கோ 51யைக் காட்டிலும் 14 விழுக்காடும் அதிக மகசூல் ஆகும். அதிக மகசூல் திறனும், பூச்சி மற்றும் நோய்த் தாக்கும் திறனும் சாயாத்தன்மையும் சிறந்த சமையல் பண்புகளையும் கொண்டுள்ளதால் ஏ.டி.டீ. 53 குறுவை பருவங்களில் விவசாயிகள் சாகுபடி செய்ய ஏற்றது.
மேலும் விவரங்களுக்கு ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தை அணுகலாம். தொலை பேசி எண் 0435 - 2472098, 2472108. 9698369927, 9443587352, 9488852532. மின்னஞ்சல் முகவரி dirtrri@tnau.ac.in. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story