நீலகிரியில் விடிய விடிய பலத்த மழை
நீலகிரியில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்
நீலகிரியில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பலத்த மழை
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. நேற்று காலையில் சாரல் மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று வீசியது. தொடர் மழையால் கடுங்குளிர் நிலவுகிறது.
இதற்கிடையில் ஊட்டி-இடுஹட்டி சாலையில் சின்கோனா பகுதியில் மரம் விழுந்தது. அங்கு ஊட்டி தீயணைப்புத்துறையினர் சென்று மரத்தை வெட்டி அகற்றினர். மேலும் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை பைக்காரா பகுதியில் மரம் விழுந்தது.
மின்தடை
ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுவதால் ஊட்டி, மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனை சீர் செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி மான் பூங்கா சாலையில் 2 மரங்கள் மின்கம்பிகள் மீது விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது. அவலாஞ்சி, எமரால்டு, அப்பர்பவானி உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
வெள்ளப்பெருக்கு
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று வீசியதால் கடுங்குளிர் நிலவியது. மழையால் பாண்டியாறு, மாயாறு, ஓவேலி, பொன்னானி, சோலாடி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
மேலும் கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் புஷ்பகிரி என்ற இடத்தில் நேற்று அதிகாலை 2 மணியளவில் தென்னை மரம் சாய்ந்து விழுந்தது. பாடாந்தொரை சாலையில் அதிகாலை 3.30 மணிக்கு மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு கூடலூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று கொட்டும் மழையிலும் மரங்களை மின்வாள்கள் கொண்டு வெட்டி அகற்றினர்.
பந்தல் காய்கறிகள் சேதம்
இதையடுத்து கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் பொன்வயல் என்ற இடத்தில் நேற்று மதியம் 2 மணியளவில் மரம் விழுந்தது. அங்கு தேவாலா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சென்று மரத்தை வெட்டி அகற்றினர். மேலும் பந்தலூர்-கூடலூர் சாலையில் பொன்னூர் என்ற இடத்திலும், அம்மன்காவு அருகே பொட்டச்சிறா என்ற இடத்தில் தேவன் என்பவரது வீட்டின் மீதும் மரம் விழுந்தது.
கூடலூர் அருகே உள்ள நம்பாலக்கோட்டை, கம்மாத்தி, மண்வயல், புத்தூர்வயல் உள்பட பல்வேறு இடங்களில் ஏக்கர் கணக்கில் பயிரிட்டப்பட்டு இருந்த மேரக்காய், தட்டைப்பயிறு, அவரைக்காய் உள்ளிட்ட பந்தல் காய்கறிகளின் கொடிகள் மழைக்கு சரிந்து விழுந்து சேதமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
மழை அளவு
நீலகிரியில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 13 சென்டி மீட்டர் மழை பெய்து உள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
ஊட்டி-15.6, நடுவட்டம்-12.5, மசினகுடி-20, அவலாஞ்சி-136, எமரால்டு-61, அப்பர்பவானி-56, கூடலூர்-17, தேவாலா-47, செருமுள்ளி-46, பாடாந்தொரை-64, பந்தலூர்-73, சேரங்கோடு-20 உள்பட மொத்தம் 635.30 மழை பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story