கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையை வந்தடைந்தது
கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையை வந்தடைந்தது. பால்வளத்துறை அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.
கிருஷ்ணா நதிநீர்
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் விதமாக கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரியில் இருந்து ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீரையும் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிடவேண்டும்.பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இங்கு சேமித்து ைவக்கப்படும் தண்ணீரை தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
தமிழக எல்லைக்கு வந்தது
கடந்த ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி 7.656 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து அடைந்தது. இந்த ஆண்டு கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.தற்போது ஏரியில் வெறும் 187 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.
அதன்பேரில் கடந்த 14-ந்தேதி காலை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அங்கு வினாடிக்கு 2,100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து நேற்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது.
மலர்தூவி வரவேற்பு
அப்போது தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் சீறி பாய்ந்து வந்த நீரை மலர்தூவி வரவேற்றனர். உடன் எம்.எல்.ஏ.க்கள் டி.ஜே.கோவிந்தராஜன், வி.ஜி.ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, மதுரவாயல் கணபதி, சந்திரன், துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, தலைமை பொறியாளர் ரவீந்திரநாத், கண்காணிப்புப் பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் ஜார்ஜ், உதவி செயற்பொறியாளர்கள் பிரதீஷ், சண்முகசுந்தரம், ஊத்துக்கோட்டை தாசில்தார் ராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.இந்த தண்ணீர் 25 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து இன்று (வியாழக்கிழமை) காலை பூண்டி ஏரியை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூண்டி நீர்தேக்கத்துக்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருப்பதால் அதன் நீர் இருப்பு அதிகரிக்கப்பட்டு இந்த வருடம் சென்னையின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story