நெம்மேலியில் அமைக்கப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் புதிய நிலையத்தில் ஆய்வு


நெம்மேலியில் அமைக்கப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் புதிய நிலையத்தில் ஆய்வு
x
தினத்தந்தி 17 Jun 2021 9:47 AM IST (Updated: 17 Jun 2021 9:47 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் மையம் அருகில் நாளொன்றுக்கு 150 மில்லியன் கன லிட்டர் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இங்கு, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் சா.விஜயராஜ் குமார் ஆய்வு செய்தார். குறிப்பாக, கடல் நீரை உள்வாங்கும் ஆழ்நிலை நீர் தேக்க தொட்டி, கரையாத காற்று நிறைத்தல் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல் நீர்த்தேக்க தொட்டி, நுண் வடிகட்டி மற்றும் எதிர்மறை சவ்வூடு பரவல் கட்டிடம், சுத்திகரிக்கப்பட்டு சேகரிக்கும் நீர் தேக்க தொட்டி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீர் உந்து நிலையம் ஆகியவற்றின் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார். 

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை நிலையத்தில் இருந்து வினியோகம் செய்ய பல்லாவரம் வரை 40 கிலோ மீட்டர் நீளத்திற்கு 1,400 மற்றும் 1,200 மில்லி மீட்டர் விட்டமுள்ள குழாய் பதிக்கும் பணி மற்றும் சோழிங்கநல்லூரில் அமையவுள்ள 6.80 மில்லியன் கன லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் நீர் உந்து நிலையத்தின் கட்டுமான பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.பின்னர் கட்டுமான பணிகள் மற்றும் குழாய் பதிக்கும் பணிகளை திட்டமிட்ட காலத்திற்கு முன்பே விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கும், ஒப்பந்தகாரர்களுக்கும் உத்தரவிட்டார். 

உடன் பொறியியல் இயக்குனர் கு.மதுரைநாயகம், தலைமை பொறியாளர் பி.ராசாராம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story