நாகூர்-நன்னிலம் சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் - அதிகாரிகள் கவனிப்பார்களா?
நாகூர்-நன்னிலம் சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டச்சேரி,
நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே நாகூர்-நன்னிலம் சாலை வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய் செல்கிறது. இதன் மூலம் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மரைக்கான் சாவடி அருகில் நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நான்கு வழி சாலை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டிய போது கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் குடிநீர் அதிக அளவில் வெளியேறி அருகில் உள்ள வயலில் ஓடி குளம் போல் தேங்கி வீணாகிறது இதனால் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நாகூர் - நன்னிலம் மெயின் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய்களை சீரமைக்க கவனம் செலுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story