அடிப்படை வசதிகள் மேம்பட நாகூர் தனி நகராட்சியாக அறிவிக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
அடிப்படை வசதிகள் மேம்பட நாகூரை தனி நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நாகூர்,
நாகை மாவட்டத்தில் நாகூர் கடற்கரையோரம் அமைந்துள்ள எழில்மிகு நகரமாகும். நாகூரில் உள்ள தர்கா உலக அளவில் பிரசித்திப்பெற்றது. தற்போது நாகை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக நாகூர் உள்ளது. நாகை நகராட்சியில் நாகூர் பகுதி 1-வது முதல் 11-வது வார்டு வரை உள்ளது. இந்த பகுதியின் மக்கள் தொகை 35 ஆயிரத்து 791 ஆகும். ஆரம்ப காலத்தில் நாகூர் தனி ஊராட்சியாகவும், நாகை தனி நகராட்சியாகவும் செயல்பட்டு வந்தது.
1991-ம் ஆண்டு நாகூரில் சுகாதாரம் மற்றும் அடிப்படை தேவைகளை மேம்பாடு செய்வதற்காக நாகை நகராட்சியுடன் நாகூர் ஊராட்சி இணைக்கப்பட்டது, ஆனால் தற்போது வரை நாகூர் அடிப்படை வசதிகள் இன்றியே உள்ளது. நாகை நகராட்சியால் நாகூர் பகுதிக்கு நகராட்சியின் அடிப்படை சேவைகளை வழங்க முடியவில்லை என இந்த பகுதியை சேர்ந்த மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதற்கு காரணம் நாகை நகராட்சியில் இருந்து நாகூர் பகுதிகள் 12 கிலோ மீட்டர் வரை நீண்டு உள்ளது. இதன் காரணமாக நாகை நகராட்சி தனது சேவைகள் வழங்க தினமும் சிரமப்பட்டு வருகிறது. நாகை நகராட்சி அலுவலகம் சென்று நாகூர் பகுதிக்குரிய கோரிக்கைகளை தெரிவித்தாலும், பல்வேறு காரணங்களால் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
நாகூர் பகுதிக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் இங்கு சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் சிரமப்படும் சூழல் நிலவுகிறது. எனவே நாகை நகராட்சியில் இருந்து நாகூரை தனியாக பிரித்து நாகூரை தனி நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியின் மக்கள் தொகை 25 ஆயிரத்து 423. திருத்துறைப்பூண்டி நகராட்சியின் மக்கள் தொகை 24 ஆயிரத்து 404. இவ்வாறு நாகூரை விட குறைவான மக்கள் தொகை கொண்ட நகராட்சிகள் நிறைய உள்ளன.
20 ஆயிரம் மக்கள் தொகை மற்றும் ரூ.4 கோடி வரை வருமானம் தரும் பகுதியாக இருந்தால் இரண்டாம்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தலாம் என அரசு விதிகள் உள்ளன. இதுகுறித்து நாகூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
நாகூர் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கவும், சுகாதாரம் மேம்படவும், நாகூர் மற்றும் அருகில் உள்ள பனங்குடி, தெத்தி, முட்டம் ஆகிய பகுதிகளை இணைத்து தனி நகராட்சியாக அறிவிக்க வேண்டும்.
நாகை நகராட்சியில் நாகூரை பிரித்து நகர்புற பகுதிகளான அக்கரைப்பேட்டை, பாப்பாகோவில், சிக்கல் ஆகிய பகுதிகளை இணைத்தால் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பகுதியாக நாகை நகராட்சி மாறிவிடும்.
இதனால் சிறப்பு நிலை நகராட்சியாக நாகை நகராட்சியும் தரம் உயர்த்தப்படும். எனவே நாகை நகராட்சியில் இருந்து நாகூரை பிரித்து தனி நகராட்சியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story