கொரோனா நிவாரணம் பெற முடியாமல் தவிக்கும் மலைக்கிராம மக்கள
ரேஷன் கார்டு இல்லாததால் கொரோனா நிவாரணம் பெற முடியாமல் பழனி அருகே மலைக்கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது மஞ்சனூத்து கிராமம். காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த சுமார் 40 பேர் வசிக்கின்றனர்.
இங்குள்ளவர்கள் வீடு, மின்சாரம், குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமல் தினமும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு ரேஷன் கார்டு, பழங்குடியினருக்கான சாதிச்சான்று என எந்தவொரு ஆவணமும் இல்லை.
இதனால் அரசின் கொரோனா நிவாரணம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் மலையில் கடுக்காய், தேன், நெல்லி, வாரியபுல் ஆகியவற்றை சேகரித்து அதை விற்று பிழைப்பு நடத்தி வருகிறோம்.
உணவு தேவைக்காக மட்டும் காவலப்பட்டிக்கு சென்று அரிசி, காய்கறி உள்ளிட்டவற்றை வாங்கி வருகிறோம்.
எங்கள் பகுதியை சேர்ந்த 3 பேருக்கு மட்டும் ரேஷன்கார்டுகள் உள்ளது. மற்றவர்களுக்கு ரேஷன் கார்டு, சாதிச்சான்று உள்ளிட்டவை இல்லை.
ஆகவே எங்கள் பகுதி மக்களுக்கு ரேஷன் கார்டு, சாதிச்சான்று உள்ளிட்ட அரசின் ஆவணங்கள் கிடைக்கவும், எங்கள் பகுதி மக்களுக்கு வீடு, சாலை, குடிநீர், மின்சாரம், அடிப்படை வசதிகள் செய்து தரவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story