பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி பலி


பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி பலி
x
தினத்தந்தி 17 Jun 2021 10:34 PM IST (Updated: 17 Jun 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி பரிதாபமாக இறந்தார்.

பந்தலூர்

பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி பரிதாபமாக இறந்தார்.

மாற்றுத்திறனாளி

பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே குறிஞ்சி நகர் உள்ளது. வனப்பகுதியையொட்டி உள்ள இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து குடியிருப்புகளை சேதப்படுத்தியும், விவசாய பயிர்களை நாசம் செய்தும் வருகின்றன. 

இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே வசித்து வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக குறிஞ்சிநகர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குறிஞ்சி நகரை சேர்ந்த சரவணமுத்து என்பவரின் மகன் பாலகிருஷ்ணன் (வயது 37). மாற்றுத்திறனாளி. 

இவர் நேற்று காலையில் வீட்டைவிட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு புதர்மறைவில் இருந்து வந்த  காட்டு யானை திடீரென அவரை தாக்கி தூக்கி வீசியது. 

காட்டு யானை தாக்கி பலி

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவத்தில் பாலகிருஷ்ணன் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து சத்தம் எழுப்பி காட்டு யானையை அங்கிருந்து விரட்டினர். 

பின்னர் பாலகிருஷ்ணனை மீட்டு, சிகிச்சைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு அமீர்அகமது, சேரம்பாடி வனச்சரகர் மனோகரன் (பொறுப்பு), போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜாகண்ணன், திருஞானசம்பந்தம், வனவர் சசிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

ரூ.50 ஆயிரம் நிவாரணம்

தொடர்ந்து காட்டு யானை தாக்கி இறந்த பாலகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் நிவாரண தொகையாக முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. இதனை கூடலூர் ஆர்.டி.ஓ. சரவணகண்ணன், பந்தலூர் தாசில்தார் தினேஷ்குமார், வனச்சரகர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் வழங்கினர். 

பிரேத பரிசோதனைக்கு பின்னர் பாலகிருஷ்ணனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story