நெய்வேலியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது


நெய்வேலியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Jun 2021 10:49 PM IST (Updated: 17 Jun 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடலூர், 

நெய்வேலி பெருமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (வயது 42). இவர் நெய்வேலி பிளாசா அருகில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு ரஜினிகாந்த் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த நெய்வேலியை சேர்ந்த முருகன் மகன் வினோத் என்கிற வினோத் குமார் (23), ராஜேந்திரன் மகன் அகிலன் (23) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி, கல்லா பெட்டியில் இருந்த 500 ரூபாயை பறித்துக்கொண்டு, இது பற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டுச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத் குமார், அகிலன் ஆகியோரை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம்

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட வினோத் என்கிற வினோத்குமார் மீது குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், நெய்வேலி நகர காவல் நிலையத்தில் இரண்டு கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. இதனால் அவரது தொடர் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு வினோத் குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், வினோத்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வினோத்குமாரிடம், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Next Story