நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிகிச்சை பிரிவில் பாதுகாப்பு கவச உடை அணிந்து கலெக்டர் ஆய்வு
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையை கலெக்டர் ஸ்ரேயா சிங் பாதுகாப்பு கவச உடையணிந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் உள்ளாட்சி, நகராட்சி பகுதிகளில் வீடு, வீடாக சென்று பல்ஸ்சாக்சி மீட்டர் கருவி கொண்டு ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்வது குறித்தும் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:- கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு கடந்த 1½ ஆண்டு காலமாக பொதுமக்களை காக்கும் பணியாற்றி வரும் அனைத்துத்துறை அலுவலர்களையும் பாராட்டுகிறேன் இவ்வளவு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும் நாமக்கல் மாவட்டம் தளர்வுகள் அளிக்க முடியாத நோய்த்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகத்தான் உள்ளது. இந்த நிலையை ஒன்றிரண்டு வாரங்களுக்குள் மாற்றி முழுமையாக நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட மாவட்டமாக உருவாக்க வேண்டும்.
எனவே உள்ளாட்சி நிர்வாகங்கள் தங்கள் பகுதியில் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி சரியாக நடைபெறுவதை உறுதி செய்வதுடன் சளி, இருமல், காய்ச்சல் உள்ள நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி, நோய்த்தொற்றின் ஆரம்ப நிலையிலேயே தங்களது தந்தை, தாய் அல்லது மகன், மகள் போன்ற உறவினர்களை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அழைத்து வந்து பரிசோதனை செய்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றவர்கள் விரைவாக குணமடைவதுடன், அசாதாரண சூழ்நிலை ஏற்படா வண்ணம் தடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மருத்துவக்கல்லூரி முதல்வர் சித்ரா, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) சோமசுந்தரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சித்ரா, தனி தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) பச்சைமுத்து உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் ஸ்ரேயா சிங் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு கவச உடையணிந்து கொரோனா சிகிச்சை பிரிவிற்கு சென்று, அந்த பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளுக்கும் வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஒவ்வொருவராக கேட்டறிந்தார்.
அப்போது நோயாளிகளின் நுரையீரல் தொற்றின் அளவு குறித்து சி.டி ஸ்கேன் அறிக்கையை காண்பித்து தொற்றின் தன்மை குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் டாக்டர்கள் விளக்கினார்கள். மேலும் நோயாளிகளிடம் தாங்கள் அழைத்தால், மருத்துவர்கள், செவிலியர்கள் வருகின்றார்களா? என்று கேட்டு மருத்துவ உதவி உடனுக்குடன் நோயாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்தார். மேலும் உணவு வழங்கப்படுவது குறித்தும், தரம் மற்றும் சுவையின் திருப்தி குறித்தும் நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
பதவி ஏற்ற முதல் நாளிலேயே கொரோனா சிகிச்சை பிரிவில் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
Related Tags :
Next Story