கொரோனா சிகிச்சை மையத்தில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு


கொரோனா சிகிச்சை மையத்தில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
x
தினத்தந்தி 17 Jun 2021 11:42 PM IST (Updated: 17 Jun 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி பகுதி கொரோனா சிகிச்சை மையத்தில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி சுகாதாரப்பணியாளர்கள், உள்ளாட்சி,  ஊராட்சித்துறை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்களை கொண்டு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு மாவட்டம் முழுவதும் வீடு வீடாக சென்று நோய் தொற்று அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல்  போன்றவை யாருக்காவது உள்ளதா என்று கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
 இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய கலெக்டராக  ஸ்ரீதர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவர் நேற்று  காலை 8 மணிக்கு ஏமப்பேர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்று வந்த  கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கள்ளக்குறிச்சி நகராட்சி 15-வது வார்டில் யாருக்காவது சளி, காய்ச்சல் உள்ளதா என முன் களப்பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியையும் ஆய்வு செய்தார். 

கொரோனா சிகிச்சை மையம்

 இதையடுத்து  சேலம்-சென்னை புறவழிச்சாலையில் தச்சூர் அருகே  முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியையும் கலெக்டர்ஸ்ரீதர்  பார்வையிட்டார்.
 பின்னர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா சிகிச்சை மையத்தையும், ஏ.கே.டி. பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தையும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தையும் அவர் ஆய்வு செய்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் மருத்துவ வசதி மற்றும் உணவு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். 

ஆக்சிஜன் இருப்பு

 மேலும் அதிகாரிகளிடம் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, சிகிச்சை விவரங்கள் மற்றும் ஆக்சிஜன் இருப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்ததோடு, கொரோனா நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர் தீயணைப்பு நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
 இந்த ஆய்வின்போது .சுகாதாரப்பணிகள் மாவட்ட துணை இயக்குனர் சதீஷ்குமார், டீன் உஷா, மருத்துவர்கள் பழமலை, கணேஷ்ராஜா, பங்கஜம், தாசில்தார் பிரபாகரன், நகராட்சி ஆணையர் குமரன் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story