கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் குறித்து வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி
கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் குறித்து வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்தது.
கரூர்
கணக்கெடுப்பு பணி தீவிரம்
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக யாருக்கேனும் கொரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவைகள் உள்ளதா? என்பது குறித்து நேற்று கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் களப்பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கேட்டறிந்து கண்காணித்து கணக்கெடுத்து வரும் பணி நடைபெற்றது.
இதில் தாந்தோன்றிமலைப் பகுதியில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது, களப்பணியாளர்களிடம் எவ்வாறு கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறுகின்றது, ஒரு நாளில் எத்தனை வீடுகளுக்குச்சென்று கணக்கெடுக்க முடிகின்றது, இதுவரை இந்தக் கணக்கெடுப்பில் கொரோனா தொற்றிக்கான அறிகுறிகள் உள்ளவர்களாக எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அறிவுறுத்தல்
அறிகுறிகள் உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் அடுத்த கட்டமாக எந்தமாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது என்பது குறித்து விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
மேலும், தூய்மைப்பணியாளர்கள் தினந்தோறும் வீடுகளுக்கு வந்து குப்பைகளை சேகரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் களப்பணிளார்கள் தினந்தோறும் ஆய்வுக்கு வருகின்றார்களா என்றும், தங்கள் பகுதியில் வேறு ஏதேனும் அடிப்படை வசதிகள் குறித்த பிரச்சினைகள் உள்ளதா என்றும் கேட்டறிந்த கலெக்டர் களப்பணியாளர்கள் ஆய்வுக்கு வரும்போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கொரோனா தடுப்பூசி
பின்னர் கரூர் ஜவகர்பஜார் கடைவீதியில் உள்ள நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகை மற்றும் 14 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருவதையும், கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, கரூர் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனையில் ஏசியன் பேப்ரிக் நிறுவனம் மற்றும் செந்தில்பாலாஜி பவுண்டேசன்ஸ் பங்களிப்புடன் ரூ.1.02 கோடி மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டியுடன் கூடிய 80 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினையும், ஆக்சிஜன் உற்பத்திக்காக அமைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த ஆய்வின்போது, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் முத்துச்செல்வன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், நகராட்சி ஆணையர் சுதா, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானக்கண் பிரேம்நிவாஸ், துணை இயக்குனர் மரு.சந்தோஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story