தர்மபுரி அருகே அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி மது பாட்டில்கள் வாங்கி வந்தபோது பரிதாபம்
தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து லாரி மோதியதில் 3 பேர் பலியானார்கள். இவர்கள் மது பாட்டில்கள் வாங்கி வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
நல்லம்பள்ளி:
தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து லாரி மோதியதில் 3 பேர் பலியானார்கள். இவர்கள் மது பாட்டில்கள் வாங்கி வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
கோதுமை லாரி
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு கோதுமை பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக ஈஸ்வரன் (35) என்பவர் உடனிருந்தார்.
அந்த லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலை இரட்டை பாலம் வழியாக வந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் தாறுமாறாக ஓடியது.
3 பேர் சாவு
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி அடுத்தடுத்து மோதியது. இதில் அந்த மோட்டார் சைக்கிள்களில் சென்ற 4 பேர் தூக்கி வீசப்பட்டனர். 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல்் நசுங்கி பலியானார்கள். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இதற்கிடையில் தொடர்ந்து தறிகெட்டு ஓடிய லாரி முன்னால் சென்று கொண்டிருந்த இன்னொரு லாரி மீது மோதி நின்றது. இதில் லாரி டிரைவர் ஜெகதீஷ், மாற்று டிரைவர் ஈஸ்வரன் இருவரும் படுகாயம் அடைந்தனர். தாறுமாறாக ஓடிய லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி இருந்தது.
லாரி தாறுமாறாக ஓடியதால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் விபத்து நடந்த இடத்தில் திரண்டனர். இதுபற்றிய தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
சேலத்தை சேர்ந்தவர்கள்
விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வேப்பமரத்தூரைச் சேர்ந்த நெசவு தொழிலாளர்களான சாமிநாதன் (32), செல்வராஜ் (32), இன்னொரு ஈஸ்வரன் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் காயம் அடைந்தவர் மோட்டார் சைக்கிளில் வந்த ராஜீ (40) என்பதும் தெரிய வந்தது.
போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பலியானவர்களது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் மானியதஅள்ளியில் மதுவாங்கி விட்டு வந்தபோது விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
டி.ஐ.ஜி. பார்வையிட்டார்
விபத்து நடந்த இடத்தை சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மகேசுவரி, போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், துணை சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் பழனிசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், சுங்க சாவடி மேலாளர் நரேஷ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story