பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாநில நிர்வாகி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் கட்டுமான தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பங்கேற்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கட்டுமான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே 6 மாதங்களுக்கு கட்டுமான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 மாத காலத்திற்கு தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.
இழப்பீடு
கொரோனாவால் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். இணையதளம் மூலமாக நலவாரிய பதிவில் விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகளை தளர்த்தி கட்டுமான தொழிலாளர்களை பதிவு செய்ய வேண்டும்.
தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நலவாரிய பயன்கள் அனைத்தையும் தகுதியுள்ள அனைத்துதொழிலாளர்களுக்கும் மீண்டும் வழங்க வேண்டும். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்டுமான தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story